துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை தொடர் தென்கொரியாவில் கடந்த 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியா சார்பில் அர்ஜூன் பாபுதா மற்றும் பார்த் மகிஜா ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் இருவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதில் அர்ஜூன் பாபுதா சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டியில் முதல் இடத்தை பிடித்தார். இதன்பின்னர் தங்கப் பதக்கத்திற்கான போட்டி இவருக்கும் லுகாஸ் கோஸ்னியஸ்கி இடையே நடத்தப்பட்டது. அதில் 17-9 என்ற கணக்கில் அர்ஜூன் பாபுதா வென்றார். இதன்மூலம் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
மற்றொரு இந்திய வீரரான் பார்த் மகிஜா இறுதிப் போட்டியில் 258.1 புள்ளிகள் எடுத்து 4வது இடத்தை பிடித்தார். வெண்கலம் வெல்லும் வாய்ப்பை 9.2 புள்ளிகலில் இவர் தவறவிட்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான அர்ஜூன் பாபுதா ஏற்கெனவே 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பையில் இதே பிரிவில் தங்கம் வென்று இருந்தார். இந்தப் பதக்கம் வென்று 6 ஆண்டுகளுக்கு பிறகு இவர் சீனியர் பிரிவில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
அடுத்ததாக இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் நவீன், சாகர் மற்றும் சிவா நர்வால் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களில் நவீன் 587 புள்ளிகள், சாகர் 582 புள்ளிகள் மற்றும் சிவா நர்வால் 580 புள்ளிகள் எடுத்தனர். இவர்கள் மூன்று பேரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். அதேபோல் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் யுவிகா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவர்கள் அனைவரும் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்