கேரளா, கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து  உபரிநீராக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி வினாடிக்கு இந்த இரண்டு அணைகளில் இருந்து சுமார் 7,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரித்து நேற்று இரவு கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 74,356 மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 30,00 கன அடி என மொத்தம் 1,04,356 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனை அடுத்து காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுவுலுக்கு  தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. 

 



 

 

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கர்நாடக அணைகளிலிருந்து முதலில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. தொடர்ந்து காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு  வினாடிக்கு சுமார் 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து, கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது.

 



 

மேலும் நீர்வரத்து படிப்படியாக உயரும் என்பதால், நேற்றே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்தார். மேலும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும், பரிசல் பயணம் செல்ல கூடாது எனவும், ஆற்றல் இறங்கவோ, கால்நடைகளை ஆற்றுப் பக்கம் அனுப்பவவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளார். மேலும் நீர்வரத்து அதிகரப்பால், ஒகேனக்கலில் பாதுகாப்பு பணிகளில் காவல் துறையினர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.  மேலும் கர்நாடக அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர், படிப்படியாக உயர வாய்ப்புள்ளது. இந்நிலையில் நேற்று மாலை திறக்கப்பட்ட  50,000 கன அடி தண்ணீர், நாளை மதியத்திற்குள் வர வாய்ப்புள்ளது. மேலும் நேற்று இரவு திறக்கப்பட்ட ஒரு இலட்சம் கன அடி தண்ணீர் நாளை மாலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்தை மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் கண்காணித்து அளவீடு செய்து வருகின்றனர். மேலும் இரண்டு அணிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தமிழகத்திற்கான நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.