ஐபிஎல் 14ஆவது சீசன் 50ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி போராடி தோற்றது. இந்த மேட்சின் போது சாக்‌ஷி தோனி மகள் ஜிவா ஸ்டாண்ட்ஸில் அமர்ந்திருந்தனர். டெல்லி அணிக்கு 3 ஓவர்களில் 28 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற தருணத்தில் தோனி மகள் ஜிவா கையைக் கூப்பி தன் தந்தையின் அணி வெற்றி பெற வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்தது வைரல் புகைப்படமாகியுள்ளது. ஆனால் ஆட்டம் தந்தை தோனிக்கு சாதகமாக இல்லை, தோல்வி தழுவியது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டூ பிளஸி ஆகியோர் ஓபனர்களாக களமிறங்கினர். முதல் 2 ஓவர்களில் 26 ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் 2.4ஆவது ஓவரில் அக்சர் படேல் பந்துவீச்சில் டூ பிளஸி 10 (8) அவுட் ஆனார். இதனால், சிஎஸ்கேவுக்கு துவக்கத்திலேயே பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில், நோர்க்கியா வீசிய 4.4ஆவது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட்டும் 13 (13) ஆட்டமிழந்தார். அதன்பிறகு சிஎஸ்கேவின் ரன் வேகத்தில் தொய்வு ஏற்படத் துவங்கியது. அந்த அணி பவர் பிளேவில் 48/2 ரன்கள் சேர்த்தது. தொடர்து 7.4ஆவது ஓவரில் அக்சர் படேல் பந்துவீச்சில் மொயின் அலி 5 (8) அவுட் ஆனார். அடுத்த (8.3) ஓவரிலேயே அஸ்வின் பந்துவீச்சில் ராபின் உத்தப்பா 19 (19) ஆட்டமிழக்க அம்பத்தி ராயுடு, மகேந்திரசிங் தோனி ஆகியோர் நிதானமாக விளையாடி சிங்கில்ஸ் எடுத்து வந்தனர். இதனால், சிஎஸ்கேவின் ஸ்கோர் மெல்ல உயர ஆரம்பித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 136/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. அம்பத்தி ராயுடு 55 (43), ஜடேஜா 1 (2) ஆகியோர் களத்தில் இருந்தார்கள். அக்சர் படேல் 2/18 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.



இலக்கை துரத்திக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஓபனர் பிரித்வி ஷா 18 (12) ரன்கள் எடுத்து நடையைக் கட்ட, தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் 2 (7) ஆட்டமிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே பௌலர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசத் துவங்கினர். இதனால், நெருக்கடியுடன் விளையடிய ரிஷப் பந்த் 15 (12), ரிபல் படேல் 18 (20) போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தார்கள். அஸ்வின் 2 (3) ரன்கள் மட்டுமே அடித்தார். இவர்கள் அனைவரும் ஒருமுனையில் ஆட்டமிழந்தாலும் தவன் சிறப்பாக விளையாடி வந்தார். இதனால் டெல்லி அணிக்கு நம்பிக்கை இருந்தது. இந்நிலையில் அவரும் 39 (35) ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அஸ்வின், தவன் இருவரையும் ஷர்தூல் ஓரே ஓவரில் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஷும்ரோன் ஹெட்மையர், அக்சர் படேல் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இருவரும் சிறப்பாக விளையாடியதால், டெல்லி அணி வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்க துவங்கியது.



கடைசி 18 பந்துகளுக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டம் த்ரில்லாக சென்ற நிலையில், மிகவும் பரபரப்பாக காணப்பட்ட தோனியின் மகள் ஜிவா கண்களை மூடிக் கொண்டு இரு கைகளையும் கூப்பி தனது தந்தை இடம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்ல வேண்டும் என மனம் உருக பிரார்த்தனை செய்தார். இதையடுத்து அவரது பிரார்த்தனை புகைப்படம் வைரலாகி வருகிறது. அதன் பின்னர் ஹெட்மயர் கடைசிவரை விளையாடி டெல்லி அணியை வெற்றிக்கு இழுத்து சென்றார். சென்னை அணி போராடி தோல்வியை சந்தித்தது. இருப்பினும் ஜிவா வேண்டிக்கொள்ளும் இந்தப் புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்து தள்ளுகின்றனர். தோனி தோற்றாலும் அவரின் மகளின் புகைப்படம் நேற்று ரசிக நெஞ்சங்களை உருக்கிவிட்டது, நெகிழ்ச்சி உச்சத்துக்கு கொண்டு சென்று விட்டது என்றே கூற வேண்டும்.