ஐ.பி.எல். தொடரின் 50வது போட்டியில் சென்னை அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய டுப்ளிசிஸ்- ருதுராஜ் ஜோடி முதல் 2 ஓவர்களிலே 26 ரன்களை எடுத்தனர். ஆனால், அக்ஷர் படேல் வீசிய மூன்றாவது ஓவரில் பாப் டுப்ளிசிஸ் 10 ரன்களிலும், அடுத்த ஓவரில் ருதுராஜ், கெய்க்வாட் 13 ரன்னில் வெளியேறினார்.
டெல்லியின் சிறப்பான பந்துவீச்சால் மொயின் அலியும், சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக கிடைத்த உத்தப்பாவும் அடுத்தடுத்து அவுட்டாகினர். 9 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகள் விழுந்ததால் அம்பத்தி ராயுடுவும் – தோனியும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். சென்னை அணி 17வது ஓவரில்தான் 100 ரன்களையே கடந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18வது ஓவரில்தான் தனது முதல் சிக்ஸரை அடித்தது. கடைசி ஓவரில் தோனியை அவுட்டாக்கியதுடன் ஆவேஷ்கான் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சென்னை, 20 ஓவர்கள் முடிவில் 136 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சென்னை அணியில் அம்பத்தி ராயுடு அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். டெல்லி அணியில் அக்ஷர்படேல் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு அதிரடி தொடக்கத்தை தந்த பிரித்விஷா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் வெற்றி பெறவைத்த ஸ்ரேயாஸ் அய்யர் 2 ரன்னில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய பிறந்தநாள் நாயகன் ரிஷப்பண்ட் வந்தது முதல் அதிரடியாக ஆடினார். அவர் 12 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, ஜோடி சேர்ந்த ஷிகர் தவானும், அறிமுக வீரர் ரிப்பல் படேலும் அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினர். ஆனால், ஸ்கோரை உயர்த்த அதிரடியாக ஆட முயன்ற ரிப்பல் படேல் 18 ரன்னில் வெளியேறினார். அவர் வெளியேறிய சிறிது நேரத்தில் அஸ்வினும் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் ஒருமுனையில் விழுந்தாலும் டெல்லி வெற்றிக்காக போராடிய தொடக்க வீரர் ஷிகர்தவான் ஷர்துல் தாக்கூர் பந்தில் 39 ரன்னில் வெளியேறினார்.
டெல்லி அணியின் வெற்றிக்கு 30 பந்தில் 38 ரன்கள் தேவைப்பட்டது. ஹெட்மயரும், அக்ஷர் படேலும் சிங்கிள்களாக ரன்களை எடுத்தனர். ட்வேய்ன் ப்ராவோ வீசிய ஆட்டத்தின் 18வது ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரில் டேஞ்சர் பேட்ஸ்மேன் ஹெட்மயர் கைக்கே அளித்த கேட்ச்சை சென்னை வீரர் கிருஷ்ணப்ப கவுதம் தவறவிட்டார். மேலும், அந்த பந்து பவுண்டரியாகவும் மாறியது. அந்த ஓவரில் மட்டும் டெல்லி 12 ரன்களை எடுத்தது.
ஹேசில்வுட் வீசிய 19வது ஓவரில் ஹெட்மயர் ஒரு சிக்ஸர் அடித்த ஆட்டத்தை மேலும் விறுவிறுப்பாக்கினார். இதனால், 6 பந்தில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற விறுவிறுப்பான நிலை ஏற்பட்டது. ப்ராவோ வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் ஹெட்மயர் 2 ரன்களுடனும், இரண்டாவது பந்தை ப்ராவோ வைடாக வீசினார். இதனால் 5 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 3வது பந்தில் அக்ஷர் படேலை ப்ராவோ அவுட்டாக்கினார். இதனால் 3 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற விறுவிறுப்பான சூழல் ஏற்பட்டது. 4வது பந்தில் களமிறங்கிய ரபாடாவிற்கு ப்ராவோ யார்க்கராக வீசிய பந்தை ரபாடா அழககாக பவுண்டரிக்கு அனுப்பி டெல்லியை வெற்றி பெறவைத்தார். ஹெட்மயர் ஆட்டமிழக்காமல் 18 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்தார்.
சென்னை அணியில் ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தீபக் சாஹர், ஹேசல்வுட், ப்ராவோ தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி சென்னையை பின்னுக்கு தள்ளியது. சென்னை அணி தொடர்ச்சியாக சந்தித்த இரண்டாவது தோல்வி இதுவாகும்.