மகளிர் பிரிமியர் லீக் போட்டியானது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மார்ச் 4ஆம் தேதி தொடங்கிய இந்த லீக் போட்டி தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர் பெங்களூரு, குஜராத் ஜெயிண்ட மற்றும் உத்தர பிரதேச வாரியர்ஸ் என மொத்தம் 5 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளில் நேரடியாக மோதியது. 


இன்று இறுதிப்போட்டி:


லீக் சுற்றின் முடிவில்  டெல்லி அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மும்பை இந்தியன்ஸ் அணியும் உத்தர பிரதேச வாரியர்ஸ் அணியும் எலிமினேட்டரில் மோதிக் கொண்டன. இதில் இமாலய வெற்றி பெற்ற மும்பை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 


இன்று இரவு 7.30 மணிக்கு  மும்பை பார்ப்ரோன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இந்த தொடரின் மிகவும் பலமான அணிகளான இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் இந்தியன்ஸ் அணியும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லேனிங்கின் கேப்பிடல்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதிக் கொள்ளவுள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியின் மீது கவனத்தினை செலுத்தியுள்ளனர். 


பலம் - பலவீனம்


மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் தொடரின் முதல் ஐந்து போட்டியில் வென்று தொடக்கத்தில் யாராலும் வீழ்த்த முடியாத அணியாக தன்னை நிலைநிறுத்தியது. லீக் போட்டியில் இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி தலா ஒரு முறை வென்றன. அதிலும் குறிப்பாக இரு அணிகளும் சம பலமான அணியாக இருந்தாலும், லீக் தொடரின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி லேசான தடுமாற்றத்துடன் காணப்படுகிறது.


லீக்கில் போட்டியில் அடுத்தடுத்து சந்தித்த இரண்டு தோல்விகள் மும்பை அணியின் நம்பிக்கையை கொஞ்சம் ஆட்டிப் பார்த்துள்ளது என கூறும் அளவிற்கு அணியாக சிறு தடுமாற்றம் இருப்பதை காண முடிகிறது. ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியைப் பொறுத்த வரையில் மிகவும் பலமான அணியாகவே உள்ளது. 


வாங் - கேப்:


அதேபோல், மகளிர் பிரிமியர் லீக்கின் முதல் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்திய ஈஸி வாங் மும்பை அணியில் இருக்கிறார் என்றால் இந்த சீசனின் ஒரே போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மாரிசான் கேப் டெல்லி அணியில் உள்ளார். அதேபோல் அதிக டாட் பந்துகளையும் மாரிசான் கேப் வீசியுள்ளார். டெல்லி அணிக்கு மாரிசான் கேப் மற்றும் கேப்ஸி இருவரும் பெரும் பலமாக உள்ளனர்.  இந்த சீசனின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் ஐந்து பேரில் நான்கு பேர் மும்பை இந்தியன்ஸ் அணியினர் என்பது மும்பை அணிக்கு கூடுதல் நம்பிக்கையாக இருக்கிறது. 


மெக்லேனிங் - ஹர்மன்பிரீத் கவுர்:


அதேபோல், இந்த சீசனின் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மெக் லேனிங் 310 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். பேட்டிங்கில் மும்பை இந்தியனஸ் அணி மிகவும் பலமான அணிதான். கேப்டன் ஹர்மன்பிரீத்கவுர் ஆட்டத்தை மாற்றும் திறமை படைத்தவர். இரு அணிகளும் சம பலத்துடன் இருந்தாலும் நாளைய நாள் யாருக்கானது கோப்பை யாருக்கானது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.