மகளிர் பிரீமியர் லீக் 2024ல் சாம்பியன் பட்டத்தை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 113 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கு பிறகு அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் ஒன்றாக காணப்பட்டார். மேலும், பலாஷ் ஸ்மிருதியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்மிருதியும், பலாஷூம் இதற்கு முன் பல நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக காணப்பட்டனர். இந்தநிலையில், இவர்கள் இருவரும் நீண்ட நாள்களாக காதலில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
யார் இந்த பலாஷ் முச்சல்..?
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் பலாஷ். ஸ்மிருதி மற்றும் பலாஷ் காதல் செய்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வெளியே வந்தது. ஆனால் இதற்கு இரு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வமான பதில் வரவில்லை. ஒரு நிகழ்ச்சியின்போது பலாஷ் தனது காதலை லைவ் கச்சேரியின் ஸ்மிருதி மந்தனாவிடம் வெளிப்படுத்தினார். அப்போது, மேடையில் இருந்து பலாஷ், 'ஐ லவ் யூ ஸ்மிருதி' என்று கூறியிருந்தார். இது குறித்து ஸ்மிருதி அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த இசை நிகழ்ச்சி 2023 ல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பலாஷ் இதுவரை பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இத்துடன் திரைப்பட இயக்கத்திலும் தீவிரமாக உள்ளார்.
போட்டி சுருக்கம்:
பெண்கள் பிரிமியர் லீக் 2024 இன் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 18.3 ஓவரில் 113 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் உதவியுடன் 31 ரன்கள் எடுத்தார். எல்லிஸ் பெர்ரி 37 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரிகள் உதவியுடன் 35 ரன்கள் எடுத்தார். சோபியா டிவைன் 32 ரன்களும், ரிச்சா கோஷ் ஆட்டமிழக்காமல் 17 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இப்போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் எலிஸ் பெர்ரி 9 போட்டிகளில் 347 ரன்கள் எடுத்துள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் மெக் லானிங் 9 போட்டிகளில் 331 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.