ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ஐபிஎல் 2024ன் முதல் போட்டி வருகின்ற மார்ச் 22ம் தேதி முதல் தொடங்குகிறது.  உலகெங்கிலும் உள்ள வீரர்கள் இந்த லீக்கில் விளையாட இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளனர். ஆனால் சில பிரபலமான வீரர்கள் போட்டி தொடங்குவதற்கு முன்பே வெளியேறியுள்ளனர். ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலோ, தனிப்பட்ட காரணங்களுக்காகவோ ஐபிஎல் சீசனில் பங்கேற்க மாட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஏலத்தில் கோடிகளுக்கு வாங்கப்பட்ட வீரர்கள் காயம் காரணமாகவும், தனிப்பட்ட காரணத்திற்காகவும் யார் யார் விலகினார்கள் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.


1. கஸ் அட்கின்சன் - 1 கோடி


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த முறை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சனுக்கு கடுமையாக பந்தயம் கட்டி ரூ. 1 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால் கஸ் அட்கின்சன் மிகவும் பிஸியான கால அட்டவணை மற்றும் உடலுக்கு ஓய்வு வேண்டும் என தெரிவித்து ஐபிஎல்லில் இருந்து தனது பெயரை திரும்பப் பெற்றுள்ளார். தற்போது அவருக்கு பதிலாக இலங்கை பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீரா இடம் பெறவுள்ளார்.


2. ஹாரி புரூக் - 4 கோடி


இங்கிலாந்தின் தொடக்க பேட்ஸ்மேன் ஹாரி புரூக் ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரராக தனக்கென ஒரு பெயரை பதிவு செய்துள்ளார். இதையடுத்து, இவரை டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது. பிப்ரவரியில் அவரது பாட்டி இறந்ததால், ப்ரூக் ஐபிஎல் 2024 இல் இருந்து தனது பெயரை திரும்பப் பெற்றதாக கூறப்பட்டது. 


3. தில்ஷன் மதுஷங்க - 4.60 கோடி


தில்ஷன் மதுஷங்க இலங்கையைச் சேர்ந்த இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். சமீப காலமாக, ஒவர் இலங்கை அணிக்காக சிறப்பாக செயல்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் ரூ 4.60 கோடிக்கு ஏலம் எடுத்தது. துரதிர்ஷ்டவசமாக, சீசன் தொடங்குவதற்கு முன்பே அவருக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது. வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் அவருக்கு இந்த காயம் ஏற்பட்டது. மும்பை இந்தியன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுஷங்காவின் காயம் மிகவும் மோசமாக உள்ளதால் பங்கேற்க மாட்டார் என தெரிவித்தது. 


4. ராபின் மின்ஸ் - 3.60 கோடி


ஜார்கண்டின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ராபின் மின்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ.3.60 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். சீசன் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அவர் சூப்பர் பைக்கில் சென்றபோது விபத்துக்குள்ளானார். இதனால், இந்த வருட ஐபிஎல் தொடரில் ராபின் களமிறங்க மாட்டார். 


தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார் யார் விளையாட மாட்டார்கள்..? 


இவர்களைத் தவிர, ஐபிஎல் 2024 க்கு முன்பு தங்கள் அணிகளால் தக்கவைக்கப்பட்ட பல வீரர்கள் பல்வேறு காரணங்களால், அவர்கள் வரவிருக்கும் சீசனில் இருந்து தங்கள் பெயர்களை திரும்பப் பெற்றுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த முகமது ஷமி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் ஆகியோர் விளையாடவில்லை. அதேபோல்,  காயம் காரணமாக பிரசித் கிருஷ்ணா, ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடர்ந்து இரண்டாவது சீசனில் விளையாட முடியாது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஜேசன் ராய், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடி ஆகியோர் காயம் காரணமாக தங்கள் பெயர்களை திரும்பப் பெற்றுள்ளனர்.