ஐ.பி.எல். தொடருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, அதே பாணியில் மகளிருக்கான டபிள்யூபிஎல் தொடங்கப்பட்டது. மார்ச் 4ஆம் தேதி தொடங்கிய தொடரில் பல ட்விஸ்ட்கள் நடந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் அணி, ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக தொடர் முழுவதுமே சொதப்பியது. இறுதி சுற்றுக்கு டெல்லி அணி தகுதி பெற்றுள்ள நிலையில், மும்பை, உத்தர பிரதேச அணிகள் நாளை ப்ளே ஆப் சுற்றில் மோதுகின்றன.
நாளை பலப்பரீட்சை:
நவி மும்பையில் உள்ள டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நாளை மாலை 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அலிசா ஹீலி, தேவிகா வைத்யா, கிரண் நவ்கிரே, தஹ்லியா மெக்ராத், தீப்தி சர்மா, சிம்ரன் ஷேக், சோஃபி எக்லெஸ்டோன் ஆகிய வீரர்கள் உத்தர பிரதேச அணியில் இடம்பெற்றுள்ளதால் நாளைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என கருதப்படுகிறது.
இந்த தொடரின் பலம் வாய்ந்த அணியாக கருதப்படுவது மும்பை. யாஸ்திகா பாட்டியா, ஹேலி மேத்யூஸ், ஹர்மன்ப்ரீத் கவுர், நாட் ஸ்கிவர்-பிரண்ட், அமெலியா கெர், இஸ்ஸி வோங், அமன்ஜோத் கவுர் ஆகிய பலம் வாய்ந்த வீராங்கனைகளை கொண்ட மும்பை அணி, தொடர் முழுவதுமே ஆதிக்கம் செலுத்தி வந்தது.
மும்பை அணி, இறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும் என எதிர்பார்த்த நிலையில், டெல்லி அணிக்கு எதிரான முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் தோற்றதன் மூலம் அந்த வாய்ப்பை இழந்தது.
பெரும் எதிர்பார்ப்பு:
இச்சூழலில் நாளை நடைபெறும் போட்டி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்த தொடரில், தொடர் வெற்றிகளை குவித்து வந்த மும்பை அணியை தோற்கடித்த முதல் அணி என்ற பெருமை உத்தர பிரதேசத்தையே சாரும்.
8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளை பெற்றுள்ளது உத்தர பிரதேச அணி. குஜராத் அணியை பொறுத்தவரையில், 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்விகள் என நான்கு புள்ளிகளை பெற்றுள்ளது குஜராத் அணி.
8 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தை பிடித்துள்ள டெல்லி அணி, 8 போட்டிகளில் 6 வெற்றிகள், 2 தோல்விகளை பெற்றுள்ளது.
இருப்பினும், அதிக நெட் ரன் ரேட் காரணமாக டெல்லி நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அணி, 2 வெற்றி 6 தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று 4ஆவது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க: ஷ்ரேயாஸ் ஐயருக்கும் அறுவை சிகிச்சை… ஐபிஎல், WTC-ஐ மிஸ் செய்கிறாரா? என்ன செய்யப்போகிறது கேகேஆர் மற்றும் இந்திய டெஸ்ட் அணி?