சென்னை மண்ணில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றொரு எளிதான வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. சேப்பாக் மைதானத்தின் தன்மையை நன்கு உணர்ந்த தோனி, யுக்திகளை வகுத்து எளிதாக வென்று வருகிறார். ரவீந்திர ஜடேஜா சுழல் தாக்குதலில் தலைமை தாங்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட்டுக்கு 134 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. தொடர்ந்து ஆடிய சென்னை அணிக்கு வலுவான தொடக்கத்தை டெவோன் கான்வே மற்றும், ருதுராஜ் கெய்க்வாட் கொடுக்க ஆட்டம் பதற்றமின்றி மிகவும் எளிதாக முடிந்தது. டெவோன் கான்வேயின் ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் எடுத்த நிலையில், சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தோனி பேட்டிங்கில் களமிறங்கவில்லை என்றாலும், விக்கெட் கீப்பராக ஃபுல் ஃபார்மில் இருந்தார். ஒரு நல்ல கேட்ச், தூரத்தில் இருந்து கச்சிதமான ரன் அவுட், அதிவேக ஸ்டம்பிங் என களத்தில் சீறிப்பாய்ந்தார். ஆனாலும் பெஸ்ட் கேட்ச் ஆஃப் த மேட்ச் விருது அவருக்கு கொடுக்கப்படாததை குறித்து புகார் தெரிவித்தார்.



அட்டகாசமான கேட்ச் பிடித்த தோனி


13வது ஓவரின் இறுதிப் பந்தில் மகேஷ் தீக்ஷனா, ஹைதராபாத் அணிக் கேப்டன் எய்டன் மார்க்ரமுக்கு வீசிய பந்து கேட்ச்சில் முடிந்தது. அவர் வீசிய கேரம் பாலை, ஆஃப் சைடில் தூக்கி அடிக்க முயன்ற, மார்க்ரம் சரியாக கனெக்ட் செய்யாததால், எட்ஜ் ஆகி பின்னால் சென்றது. அதிகமாக திசை திரும்பியதால் அதுபோன்ற கேட்சைப் பிடிப்பது பொதுவாக கடினமான விஷயம். அந்த கேட்சை பிடிக்க மாட்டார் என்று நினைத்த நிலையில், சரியான சமயத்தில் அட்ஜஸ்ட் செய்து கச்சிதமாக பிடித்தார்.


தொடர்புடைய செய்திகள்: MS Dhoni: "என் கிரிக்கெட் வாழ்வின் கடைசிக் கட்டம்” உருக்கமாக பேசிய தோனி..! ஓய்வு பெறுகிறாரா தல? சோகத்தில் ரசிகர்கள்..!


சிறந்த கேட்ச் விருது கொடுக்கவில்லை


அந்த கேட்ச் மூலம் தோனி மற்றொரு விக்கெட் கீப்பிங் உலக சாதனையை படைத்தார். டி20 கிரிக்கெட்டில் இது அவரது 208வது கேட்ச் ஆகும். இதன்மூலம் அவர் தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக்கை தாண்டியுள்ளார். அற்புதமான அந்த கேட்சைப் பிடித்தபோதிலும், ‘பெஸ்ட் கேட்ச் ஆஃப் தி மேட்ச்’ விருது தோனிக்கு கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக ஹைதராபாத் ஆடும்போது, ஐந்தாவது ஓவரில் ஹாரி ப்ரூக்கை வெளியேற்றிய ருதுராஜ் கெய்க்வாட் கேட்ச் தேர்வானது.






புகாராக கூறிய தோனி


போட்டிக்கு பிந்தைய பேட்டியில் பேசிய தோனி, அந்த கேட்ச் குறித்து பேசினார். "இன்னும் அவர்கள் எனக்கு சிறந்த கேட்ச் விருது கொடுக்கவில்லை. அது ஒரு அற்புதமான கேட்ச் என்று நான் உணர்ந்தேன். முற்றிலும் வேறு பொசிஷனில் நின்று பிடித்தேன். க்ளோவ்ஸ் அணிந்து பிடிப்பதால் எளிது என்று நினைக்கின்றனர். பல நாள் முன்பு, எனக்கு இன்னும் நினைவிருக்கிறது… ராகுல் டிராவிட் அப்படி ஒரு கேட்சைப் பிடிப்பார். திறமையை வைத்தெல்லாம் அந்த கேட்சை பிடிக்க முடியாது. அதற்கு சமயோஜித புத்தி வேண்டும். நாம் பொதுவாக நிற்கும் பொசிஷனில் நின்றால் அந்த கேட்சைப் பிடிக்க முடியாது. உடனடியாக கீப்பிங் பொசிஷனை மாற்றி கையை மேலே கொண்டு வர வேண்டும்.", என்றார். மேலும் அந்த விஷயத்தை செய்ய அவருக்கு ஒரு செகண்டுக்கும் குறைவான நேரமே இருந்ததுதான் முக்கியமான விஷயம். இதன் பிறகு பல விஷயங்கள் பேசிய தோனி, ரசிகர்கள் ஆரவாரம் அடங்குவதற்காக காத்திருக்கலாமா என்று கேட்ட தொகுப்பாளரிடம், "எனக்கு ஏன் கேட்ச் ஆஃப் த மேட்ச் விருது கொடுக்கவில்லை என்று இந்த கேப்பில் கேட்கலாம்", என்று மீண்டும் ஞாபகப்படுத்தினார்.