ஐதராபாத் அணி வீரர் நடராஜனின் மகளுடன் சென்னை அணி கேப்டன் தோனி கலந்துரையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தோனி - நடராஜன் சந்திப்பு:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் மோதின. அந்த போட்டியின் முடிவுக்குப் பிறகு தமிழக வீரர் நடராஜன் தனது குடும்பத்துடன் சேர்ந்து, சென்னை அணி கேப்டன் தோனியை சந்தித்தார். இதுதொடர்பான வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தோனி வைரல் வீடியோ:
அந்த வீடியோவில் “தோனிக்கு ஐ-பை கொடுக்காமல் நடராஜனின் குழந்தை வெட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தோனியை அங்கிள் என அழைக்குமாறு குழந்தையின் தாய் வலியுறுத்தியுள்ளார். ஆனால், அந்த குழந்தையோ தோனியை பார்த்து தம்பி என கூற அங்கிருந்தவர்கள் சிரித்துள்ளனர். பின்பு இறுதியாக தோனியை பார்த்து நடராஜனின் மகள் மாமா என அழைக்க, தோனி புன்னகைத்தவாறு நடராஜனின் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது” தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஐதராபாத் அணிக்கு அட்வைஸ் கொடுத்த தோனி:
அதோ மட்டுமின்றி, ஐதராபாத் அணியை சேர்ந்த இளம் வீரர்கள் பலருக்கும் தோனி அறிவுரை வழங்கிய வீடியோவும் கவனம் ஈர்த்துள்ளது. அதில், உம்ரான் மாலிக் போன்ற பல இந்திய இளம் வீரர்கள் தோனியை சூழ்ந்து நின்று அவர் கூறிய வார்த்தைகளை கேட்டுக்கொண்டனர். அப்போது, தங்களை எப்படி தயார்படுத்திக்கொள்வது, அழுத்தமான சூழலை எப்படி எதிர்கொள்வது போன்ற பல்வேறு ஆலோசனைகளை தோனி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐதராபாத் - சென்னை அணிகள் மோதல்:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதாராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவரில் இலக்கை எட்டி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு தொடரில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. இதையடுத்து நாளை கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி விளையாட உள்ளது.