நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசிக் கட்டத்தில் இருக்கிறேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எளிதாக வென்ற சென்னை அணி
நடப்பு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 34 ரன்கள், ராகுல் திரிபாதி 21 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் ஜடேஜா அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட சென்னை அணியில் தொடக்க வீரர் டேவன் கான்வே 77 ரன்களும், ருத்துராஜ் கெய்க்வாட் 35 ரன்களும் எடுத்தனர். இதனால் 18.4 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி சென்னை அணி 4 போட்டிகளில் வெற்றியும்,2 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3 ஆம் இடத்தை அந்த அணி பெற்றுள்ளது. அதேசமயம் ஹைதராபாத் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வென்றது இல்லை என்ற சோகக்கதையும் தொடர்கிறது.
உருக்கமாக பேசிய தோனி
இந்த வெற்றிக்கு பின்னர் பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, “என்ன சொன்னாலும் செய்தாலும், இது எனது கேரியரின் கடைசி கட்டம். அதனால் விளையாடும் அனைத்து நிமிடங்களையும் அதை ரசிப்பது மிகவும் முக்கியம். மேலும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூர் மைதானத்தில் ரசிகர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் ஏற்கனவே சீசனின் தொடக்கத்தில் சொன்னது போல், சென்னை அணி ரசிகர்கள் எங்களுக்கு நிறைய அன்பை கொடுத்துள்ளார்கள். போட்டி முடிந்த பின்னரும் என்னுடைய பேச்சை கேட்க காத்திருக்கிறார்கள்” என தெரிவித்தார்.
41 வயதான எம்.எஸ். தோனி 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைக்கு பின்னரே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஓய்வுப் பெறுவதாக அறிவித்தார். ஆனால் தொடர்ந்து ஐபிஎல் தொடர்களில் விளையாடி வருகிறார். கடந்தாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை அணி கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். இதனால் தோனி ஓய்வுப் பெறப்போவதாக தகவல் வெளியானது.
ஆனால் ஜடேஜா கேப்டன் பொறுப்பில் மிகப்பெரிய அழுத்தத்தை சந்தித்ததால் மீண்டும் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதோடு தான் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் தான் விளையாடுவதையும் தோனி உறுதி செய்திருந்தார். இந்நிலையில் நேற்றைய உரையில், ”எனது கேரியரின் கடைசி கட்டம்” என தோனி குறிப்பிட்டுள்ளது ரசிகர்களிடையே தோனி இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வுப் பெறப் போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.