ஐபிஎல் தொடரில் மிகவும் முக்கியமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த அணி இதுவரை நடைபெற்றுள்ள 16 சீசன்களில் 14 சீசன்கள் விளையாடியுள்ளது. இதில் 10 முறை சென்னை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று 5 முறை கோப்பைகளை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.


அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி:


இது சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்னை அணிக்கு தோனிக்குப் பிறகு யாருக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் நமது ஏபிபி நாடு சார்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ருத்ராஜ் கெய்வாட்டுக்கே அதிக வாக்குகளை ரசிகர்கள் வழங்கினர். இந்நிலையில் 27 வயதே நிரம்பிய ருதுராஜ் கெய்க்வாட் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 


இந்திய அணியில் இன்று விளையாடும் பல இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி இடம் பிடித்தவர்கள். அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட் தனக்கான இடத்தினை இந்திய அணியில் பதிக்க சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் வீரராக இருந்த ருதுராஜ் கெய்க்வாட்டின் சொந்த ஊர், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள சாஸ்வாட் பகுதியில் உள்ள பர்கான் மேமனே கிராமம். ருதுராஜின் தந்தை தசரத் கெய்க்வாட் இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றியவர். இவரது தயார் சவிதா ஜெய்க்வாட் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர். 


தோனியால் அடையாளம் காணப்பட்ட ருதுராஜ்


ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணியில் இருக்கின்றார். ஆனால் இவருக்கு 2020ஆம் ஆண்டு முதல் சென்னை அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு சென்னை அணி லீக் போட்டிகளில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்தது. இந்த தோல்வியால சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அந்த காலகட்டத்தில் பெஞ்சில் அமரவைக்கப்பட்டிருந்த ருத்ராஜ்க்கு தோனி வாய்ப்பு கொடுத்தார்.


ஐ.பி.எல். தொடரில் அசத்தல்:


தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினை சரியாக பயன்படுத்திய ருத்ராஜ் சென்னை அணியின் கேப்டனாகவே தற்போது உயர்ந்துவிட்டார்.  2020ஆம் ஆண்டு லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் அறிமுகமான ருதுராஜ் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே டக்-அவுட் ஆனார். அந்த ஆண்டு மட்டும் மொத்தம் 6 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் மூன்று அரைசதங்களுடன் 204 ரன்கள் குவித்தார். இந்த சீசனில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 72 ரன்கள்.


இதுவரை 52 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ் மொத்தம் ஆயிரத்து 797 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும் 14 அரைசதங்களும் அடங்கும். ருதுராஜ் இதுவரை 159 பவுண்டரிகளும் 73 சிக்ஸர்களும் பறக்கவிட்டுள்ளார். ஐபிஎல் மட்டும் இல்லாமல், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பினை கூடுமானவரை சரியாக பயன்படுத்தியுள்ளார் ருத்ராஜ். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டினைப் பொறுத்தவரை மகாராஷ்ட்ரா அணிக்காக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகின்றார். 


கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்தார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 துணை கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.