ஐபிஎல் தொடரின் 17வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க போஸ்டர் மூலம் உறுதியாகியுள்ளது. 






வழக்கமாக ஐபிஎல் தொடர் தொடங்கவுதற்கு முன்னர் அனைத்து அணிகளின் கேப்டன்களும் ஐபிஎல் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். அந்த வகையில் சென்னை அணியின் கேப்டனாக பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் கேப்டனாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் சென்னை அணி பெட்டிங் பிரச்னையால் தடை செய்யப்பட்டது. இது தவிர்த்து சென்னை அணி 14 சீசன்கள் விளையாடியுள்ளது. இந்த 14 சீசன்களிலும் சென்னை அணி மகேந்திர சிங் தோனி தலைமையில் விளையாடியது. இதில் சென்னை அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இதுமட்டும் இல்லாமல் மொத்தமாக 10 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 


சென்னை அணியின் கேப்டனாக இந்த 14 ஆண்டுகளும் தோனி செயல்பட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என ரசிகர்கள் கருதி வந்தனர். இந்நிலையில் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக தோனி தனது முகநூல் பக்கத்தில் இந்த சீசனில் தான் ஒரு புதிய ரோலில் செயல்படவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதைவைத்தே சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகவுள்ளார் என ரசிகர்கள் மத்தியில் புகைச்சல் கிளம்பியது. இதனை உறுதி செய்யும் வகையில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். 


சென்னை அணியின் கேப்டனாக தோனி 212 போட்டிகளில் அணியை வழிநடத்தியுள்ளார். இதில் 128 போட்டிகளில் வெற்றியும் 82 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 60.38 % வெற்றி பெற்றுள்ளது.