கிளப் அணிகளுக்கான கால்பந்தாட்ட போட்டிகளில் அதிக கோல்களில் ஈடுபட்டவர் எனும் புதிய மைகல்லை, அர்ஜெண்டினாவை சேர்ந்த மெஸ்ஸி எட்டியுள்ளார்.


மெஸ்ஸியின் புதிய மைல்கல்:


ஐரோப்பிய கால்பந்தாட்ட தொடரில் பிஎஸ்ஜி அணிக்காக மெஸ்ஸி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்ததோடு, புதிய மைகல்லையும் எட்டியுள்ளார். அதன்படி, கிளப் போட்டிகளில் 1000 கோல்களில் ஈடுபட்டவர் எனும் பெருமையை அவர் தனதாக்கியுள்ளார். இதில் 702 கோல்களை அவர் நேரடியாக அடித்ததோடு, 298 கோல்களுக்கு வெற்றிகரமாக அசிஸ்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் சுமார் 710 கோல்கள் மற்றும் 225 அசிஸ்ட்களுடன் ரொனால்டோ இரண்டாவது இடத்தில் உள்ளார். 


நைஸ் அணிக்கு எதிராக வெற்றி


ஐரோப்பியன் லீக் தொடரில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, நைஸ் அணிக்கு எதிராக களமிறங்கினார். அந்த போட்டியின் 26வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அதனை தொடர்ந்து போட்டியின் 76வது நிமிடத்தில் மெஸ்ஸியின் அசிஸ்ட் மூலம், சக வீரரான செர்ஜியோ ரமோஸ் கோல் அடித்து பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியை 2-0 என வெற்றி பெற செய்தார். கால்பந்தாட்ட உலகில் தனது நீண்ட கால போட்டியாளராக கருதப்பட்ட, செர்ஜியோ ரமோஸுக்கு  கோல் அடிக்க அசிஸ்ட் செய்ததன் மூலம், மெஸ்ஸி இந்த புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


பிஎஸ்ஜி அணியை விட்டு விலகுகிறாரா மெஸ்ஸி?


அதோடு, நடப்பு தொடருடன் மெஸ்ஸி பிஎஸ்ஜி அணியில் இருந்து விலகுவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி அரேபியாவை சேர்ந்த அல் ஹிலால் அணி ஆண்டிற்கு 440 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஊதியமாக தர ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, பார்சிலோனா மற்றும் எம்எல்எஸ் அணிகளில் ஏதேனும் ஒன்றிற்கு மெஸ்ஸி இடம்மாறுவார் எனவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் தான், கடந்த வாரம் உள்ளூரில் நடைபெற்ற லீக் போட்டியில் பிஎஸ்ஜி அணி தோல்வியுற்றதால், அந்த அணியின் ரசிகர்களால் மெஸ்ஸி விமர்சிக்கப்பட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக நைஸ் அணிக்கு எதிராக பிஎஸ்ஜி அணியின் வெற்றிக்கு மெஸ்ஸி வித்திட்டார். பாரீசில் அடுத்து வாரம் நடைபெறும் போட்டியில் அந்த அணி, லென்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.


கிளப் அணிகளில் மெஸ்ஸி:


ஐரோப்பிய தொடரின் நடப்பு சீசனில் இதுவரை மெஸ்ஸி 18 கோல்களை அடித்ததோடு, 19 கோல்களுக்கு அசிஸ்ட் செய்துள்ளார். கிளப் அணிகளுக்கான தனது கோல்களில் பெரும்பாலானவற்றை, பார்சிலோனா அணிக்காக தான் மெஸ்ஸி அடித்துள்ளார். அதன்படி ஒரு அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை, பர்சிலோனா அணிக்காக 672 கோல்களை அடித்ததன் மூலம் மெஸ்ஸி தன்னகத்தே கொண்டுள்ளார். அதோடு, 2012ம் ஆண்டு 91 கோல்களை அடித்து, ஒரு ஆண்டில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.