உலகில் உள்ள ஒவ்வொரு இளம் கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல் போட்டிகள் விளையாட விரும்ப பல காரணங்கள் உண்டு, ஆனால் அதில் முக்கியமானது சீனியர் வீரர்களுடன் இருந்து, ஆட்ட நுணுக்கங்களை கற்றுத்தேர்வதுதான். அப்படி ஐபிஎல் பல வீரர்களுக்கு படிப்பகமாக, கற்றுக்கொள்ளும் இடமாக இருந்துள்ளது. அதில் மூத்த ப்ரொஃபசர்தான் தோனி.
தோனி 'மாஸ்டர் கிளாஸ்'
வெள்ளிக்கிழமை இரவு சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த போட்டிக்குப் பிறகு சன்ரைசர்ஸ் அணி இளம் வீரர்களுக்கான 'மாஸ்டர் க்ளாஸை' எடுத்துக்கொண்டிருந்தர், க்ளாஸான மாஸ்டர் எம்எஸ் தோனி. அதன் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர், இந்நாள் சிறந்த கமென்டேட்டர்களில் ஒருவர், இயான் பிஷப் பகிர்ந்து அவருடைய கருத்தையும் தெரிவித்திருந்தார்.
வைரலான வீடியோ
இந்த போட்டியில் SRH க்கு எதிராக CSK ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதோடு IPL-இல் சென்னை மண்ணில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. போட்டிக்குப் பிறகு, தோனி SRH யூனிட்டின் இளம் வீரர்கள் அனைவருடனும் கலந்துரையாடிய வீடியோ வெளியானது. அவர்கள் கேப்டன் தோனியின் பேச்சை முழு கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தது வீடியோவில் தெரிகிறது.
வீடியோ
வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை மையமாக வைத்து தோனி வீரர்களுடன் கைகளை அசைத்து பேசிக் கொண்டிருந்தார். பின்னர், SRH இன் ஃபினிஷர் என்று நீண்ட காலமாகக் கூறப்பட்டாலும் இன்னும் பேர் சொல்லக்கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்தாத அப்துல் சமாத்துடன் அவர் நீண்ட நேரம் கலந்துரையாடுவதையும் காண முடிந்தது.
இயான் பிஷப் ட்வீட்
இந்த வீடியோவை வெஸ்ட் இண்டீஸ் வீரர் இயான் பிஷப் தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து, "CSK vs SRH #TATAIPL2023 ஆட்டத்தின் முடிவில் SRH தோழர்களுடன் MSD பேசிக்கொண்டிருந்த அந்த காட்சிகள் சூப்பர். ஆசிரியரின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக கேட்கும் மாணவர்கள்," என்று எழுதினார்.
CSK க்கு இது ஒரு உறுதியான வெற்றியாக அமைந்தது. ரவீந்திர ஜடேஜா சுழல் தாக்குதலில் தலைமை தாங்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட்டுக்கு 134 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. தொடர்ந்து ஆடிய சென்னை அணிக்கு வலுவான தொடக்கத்தை டெவோன் கான்வே மற்றும், ருத்துராஜ் கெய்க்வாட் கொடுக்க ஆட்டம் பதற்றமின்றி மிகவும் எளிதாக முடிந்தது. டெவோன் கான்வேயின் ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் எடுத்த நிலையில், சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.