நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து பெங்களூரு அணி வெளியேறிய நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


கோலி வெளியிட்ட பதிவு:


தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “தனக்கான சில தருணங்களைக் கொண்ட ஒரு சீசன் ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் இலக்கை அடையவில்லை. ஏமாற்றமடைந்தோம் ஆனால் நாம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டிய நேரமிது.  ஒவ்வொரு தருணத்திலும் எங்களை ஆதரித்தத விசுவாசமான ஆதரவாளர்களுக்கு, நன்றி. பயிற்சியாளர்கள், நிர்வாகம் மற்றும் எனது அணியினருக்கும் நன்றி. நாங்கள் வலுவாக திரும்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார். அதோடு, அணியினர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம், களத்தில் இறங்கி விளையாடியது மற்றும் சின்னசாமி மைதானத்தில் கூடிய ரசிகர்களின் புகைப்படங்களையும் இணைத்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரபட்டு வருகிறது.






அசத்திய விராட் கோலி:


வழக்கம் போல் நடப்பு தொடரிலும் பெங்களூரு அணிக்காக முன்னாள் கேப்டன் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 14 போட்டிகளில் விளையாடிய அவர், 639 ரன்களை குவித்தார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 101 ரன்கள் ஆகும். நடப்பு தொடரில் வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்த வந்த பெங்களூரு அணி, கடைசி இரண்டு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இதையடுத்து ஐதராபாத் அணிக்கு எதிரான 13வது லீக் போட்டியில் சேஸிங்கில் அபாரமாக சதமடித்து வெற்றியை தேடி தந்தார். அதேபோன்று குஜராத் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியிலும் தனி ஒரு ஆளாக போராடி சதம் அடித்து அசத்தினார். 


சொதப்பிய பெங்களூரு:


கோலி அபாரமான ஆடிய நிலையில் அவருக்கு உறுதுணையாக கேப்டன் டூப்ளெசிஸ் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல்லும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் முறையே நடப்பு தொடரில் 730 ரன்களையும், 389 ரன்களையும் குவித்தனர். ஆனால், இந்த 3 பேரை தவிர வேறு எந்த ஒரு பேட்ஸ்மேனும் பெங்களூரு அணியில் பெரிதாக சோபிக்காததே அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. குறிப்பாக பெங்களூரு சின்னசாமி போன்ற மைதானத்திலேயே அந்த அணி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பினர். பந்துவீச்சிலும் முகமது சிராஜ், இறுதி கட்டத்தில் பார்னெல் என சிலர் மட்டுமே ஓரளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மற்றவர்கள் ரன்களை வாரிக்கொடுத்ததும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த பிரச்னைகளை அடுத்த தொடரின்போது பெங்களூரு அணி  நிவர்த்தி செய்தால் மட்டுமே, 16 ஆண்டுகளாக தொடரும் கோப்பையை நுகர முடியாத ஏமாற்றம் முடிவுக்கு வரும்.