Virat kohli: இந்திய கிரிக்கெட் அணியின் உச்ச நட்சத்திரம் யார் என்று கேட்டால் இன்றைக்கு அனைவருமே சொல்லும் ஒரு சில பெயர்களில் இடம் பெறும் பெயர்களில் விராட் கோலியின் பெயரும் இருக்கும். அப்படியான விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முந்தைய வாழ்க்கை குறித்து இதுவரை யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
அண்மையில் விராட் தனது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை வெளியிட்டு இருந்தார். இது மிகவும் வைரலான நிலையில், பலரும் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் தங்களது மதிப்பெண்ணும் விராட் கோலியின் மதிப்பெண்ணும் சமமாக உள்ளது என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், விராட் கோலி குறித்த சுவாரஸ்யமான தகவலை விராட் கோலியின் தாயார் பகிர்ந்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பில் விராட் கோலியின் சிறுவயது நண்பரின் தாயாரான நேஹா சேந்தியிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில், விராட் கோலி சிறுவனாக இருந்த போது ஒரு நாள் மதன் லால் அகாடமிக்கு அருகில் ஒரு திரைப்படம் அல்லது விளம்பரத்தின் பெரிய போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த விராட், 'ஒரு நாள் நான் பெரிய ஆளாகி நடிகையை மணப்பேன்' என்றார் என கூறியுள்ளார். மேலும் அன்று அவர் கூறியது போல், பாலிவுட் நடிகை அனுஷ்காவைத் தான் தற்போது திருமணம் செய்துள்ளார். இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி திருமனம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வமிகா கோலி எனும் இரண்டு வயது குழந்தை உள்ளது.
விராட் கோலி குறித்து அவரது நண்பரின் தாயார் வெளியிட்டுள்ள இந்த தகவல் இதுவரை யாரும் அறிந்திடாத தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் நடிகை அனுஷ்காவுடனான காதல் குறித்து முதலில் கிசுகிசுக்கள் வெளிவர, அதன் பின்னர் இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். எப்போதும் காதலை வெளிப்படுத்தி வரும் இருவரையும் பார்த்து இவர்களைப் போல் காதல் செய்ய வேண்டும் என ஆசைப்படுபவர்கள்.
விராட் கோலி ஐபிஎல் போட்டியில் அறிமுகமானதில் இருந்து இதுவரை ஒரே அணிக்காக விளையாடியுள்ளார். பெங்களூரு அணிக்காக இதுவரை 232 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 6 ஆயிரத்து 988 ரன்கள் சேர்த்துள்ளார். மேலும், 5 சதமும் 49 அரைசதமும் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரில் இவரது அதிகபட்ச ரன் 113 ஆகும். 2016ஆம் ஆண்டு மட்டும் ஒட்டுமொத்த சீசனில் 973 ரன்கள் குவித்துள்ளார்.