ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 119 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.


ஐபிஎல் சீசன்:


கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் கிரிக்கெட் திருவிழாவின் பல போட்டிகள் இறுதிவரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றன.  பிளே ஆஃப் சுற்றுக்கு யார் யார் செல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கணிக்க முடியாத அளவில் உள்ளது. கிட்டதட்ட 4 அணிகள் 10 புள்ளிகளுடன் 4 இடத்திற்கு முட்டி மோதி வருகின்றன.


டாஸ் வென்ற ராஜஸ்தான்


இந்த சூழலில் நடைபெறும் 48வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியுள்ளன. ராஜஸ்தானில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் வென்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் குஜராத் அணி களமிறங்கியுள்ளது. அதேநேரம், நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கிலும் குஜராத் அணி களமிறங்கியுள்ளது.


 


அடுத்தடுத்து சரிந்த விக்கெட்:


இதையடுத்து களமறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பம் முதலே சொதப்பியது. தொடக்க ஆட்டக்காரரான பட்லர் வெறும் 8 ரன்களில் நடையை கட்டினார். கடந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சதம் விளாசிய ஜெய்ஷ்வால், 14 ரன்களை சேர்த்து இருந்தபோது எதிர்பாராத விதமாக ரன் - அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 


சாம்சன் அதிரடி:


மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் சாம்சன் மட்டும் சற்று நேரம் நிலைத்து நின்று ஆடினார். இருப்பினும் 20 பந்துகளில் 30 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அஷ்வின் 2 ரன்களிலும், இம்பேக்ட் பிளேயராக உள்ளே வந்த பராக் 4 ரன்களிலும், தேவ்தத் படிக்கல் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.


சுழலில் சரிந்த ராஜஸ்தான்: 


தொடர்ந்து குஜராத் அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், ஜுரெல் 9 ரன்களிலும், ஹெட்மேயர் 7 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். சற்றே நிலைத்து நின்று ஆடிய போல்ட் 15 ரன்களை சேர்த்தார். ராஜஸ்தான் அணி இழந்த 9 விக்கெட்டுகளில் 5 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்கள் தான் வீழ்த்தினர். குறிப்பாக 4 ஓவர்களை வீசிய ரஷித் கான், வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரை தொடர்ந்து நூர் அகமது 2 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும்  வீழ்த்தினர்.


குஜராத் அணிக்கான இலக்கு:


அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகளால் ராஜஸ்தான் அணி  17.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்த இலக்கை குஜராத் அணி எட்டுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.