விராட் கோஹ்லியாக இருப்பது எளிதல்ல. இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம், ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைமை என விராட் கோஹ்லியின் தோள்கள் பொறுப்புகளால் நிரம்பியது. தன்னுடைய வித்தியாசமான பேட்டிங் ஸ்டைல், தனது தலைமைப் பண்பு முதலானவற்றின் காரணமாக, விராட் கோஹ்லியைச் சுற்றி எப்போதும் கேமராக்களுடன் புகைப்படக்காரர்களும், பத்திரிகையாளர்களும் கூடுவது வழக்கம். இது விராட் கோஹ்லியின் தனிப்பட்ட விவகாரங்களைப் பெரிதும் பாதித்திருப்பது உண்மை.



சமீபத்தில் கொல்கத்தாவில் தனது பெங்களூரு அணி வீரர்களுடன் வந்திறங்கிய விராட் கோஹ்லி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான முதல் எலிமினேட்டர் போட்டிகளுக்காகப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது விராட் கோஹ்லி தொடர்புடைய நகைச்சுவையான நிகழ்வு ஒன்று தற்போது நெட்டிசன்களை சிரிப்பில் தள்ளியுள்ளது.




சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், விராட் கோஹ்லி தன் பயிற்சிகளுக்காக உடை அணிந்து கொண்டிருப்பதும், தன் அப்டோமினல் கார்ட்  அணியும் போது தன்னை வீடியோ எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிடும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது.





தான் அப்டோமினல் கார்ட் அணிவதைச் சுட்டிக்காட்டி, கேமராவைத் திருப்புமாறு விராட் கோஹ்லி கோரிக்கை வைத்தும், கேமரா திருப்பப்படாமல் தொடர்ந்து கோஹ்லியை நோக்கி படம் பிடித்துக் கொண்டே இருக்க, விராட் கோஹ்லி மறுபக்கத்தில் திரும்பி அப்டோமினல் கார்ட் அணிந்து தொடர்ந்து தனது ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றார். இந்த வீடியோ கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியினருக்கு எதிரான போட்டிகளில் விராட் கோஹ்லியின் ஆட்டம் தன் அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை பெங்களுர் அணி பெரிதும் எதிர்பார்த்து வந்த நிலையில், மும்பை இந்தியஸ் அணியின் வெற்றியைத் தனது அணியினருடன் விராட் கோஹ்லி கொண்டாடி, பேஃப் டூ ப்ளெசிஸ், க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோருடனான படம் ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.