ஏப்ரல் 2ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் முதல் போட்டியின் போது வலது தோள்பட்டையில் காயம் அடைந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி 2023 ஐபிஎல்லில் இருந்து வெளியேறியுள்ளதாக ஆர்சிபி தலைமை பயிற்சியாளர் கூறியுள்ளார்.
டாப்லி காயம்
ஆர்சிபி அணியின் முதல் போட்டியில் பந்துவீசிய டாப்லி தனது இரண்டு ஓவர்களில் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும் எடுத்தார். மும்பை அணியின் கேமரூன் கிரீனை வீழ்த்தி முக்கியமான விக்கெட்டை எடுத்த அவர், களத்தில் டைவ் செய்து ஃபீலடிங் செய்யும்போது காயம் அடைந்தார். காயம் குறித்த உறுதியான செய்தி முன்பு வெளியாகாமல் இருந்த நிலையில் அடுத்த போட்டிக்கு கொல்கத்தா சென்ற ஆர்சிபி அணியோடு அவரும் சென்றார். ஆனால், நேற்றைய போட்டியில் அவருக்கு பதிலாக டேவிட் வில்லி களம் இறங்கினார். தற்போது இங்கிலாந்து திரும்பிய அவரை குறித்து ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் கூறியுள்ளார்.
தொடரை விட்டு வெளியேறினார்
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான நேற்று இரவு ஆட்டத்தின் போது ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பேசுகையில், "துரதிர்ஷ்டவசமாக, ரீஸ் வீட்டிற்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் அவரை இங்கே வைத்திருக்க எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம், ஆனால் சிகிச்சை அளித்த மருத்துவ நிபுணர்கள் அவருக்கு ஓய்வு தேவை என்று வலியுறுத்தியதால் இங்கிலாந்து சென்றுவிட்டார்", என்றார். மேலும் ஆர்சிபி அணியில் பல வீரர்கள் காயமடைந்து வெளியேறியுள்ள காரணத்தால் அணி நிர்வாகத்திற்கு, சுமையாக மாறியுள்ளது.
மாற்று வீரரை கொண்டு வருவோம்
ஆர்சிபி அணி சரியான நேரத்தில் அவருக்குப் பதிலாக மாற்று வீரர் ஒருவரைக் கொண்டுவரும் என்று சஞ்சய் பாங்கர் கூறினார். முன்னதாக 2021 இல் ரைட் டு மேட்ச் அடிப்படையில் அணிக்குள் வந்த துஷ்மந்த சமீர, ஏற்கனவே மாற்று ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே வேறு ஒரு வீரரை தான் அணி தேடும் என்பது உறுதியாகிறது. டாப்லியை ரூ.1.9 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. டிசம்பர் மாத ஏலத்தில் 75 லட்சம் அடிப்படை விலையில் வந்த அவரை இந்த விலைக்கு அணி எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹசரங்கா - ஹேசில்உட்
டாப்லியை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் ஆர்வம் காட்டினர். ஏற்கனவே அணியின் வில் ஜாக்ஸ் மற்றும் ரஜத் பட்டிதார் காயத்தால் சீசனில் வெளியேறி உள்ள நிலையில், மூன்றாவதாக வெளியேறும் ராயல் சேலஞ்சர்ஸ் வீரராக இவர் உள்ளார். மேலும் அணியின் வணிந்து ஹசரங்கா நான்கு போட்டிகளுக்கு பின்புதான் விளையாட வருவார் என்பதாலும், ஜோஷ் ஹேசில்உட் இரண்டாம் பாதியில்தான் இணைவார் என்னும் பட்சத்தில் ஆர்சிபி அணி தற்போதைக்கு பலகீனமாகவே காணப்படுகிறது. வனிந்து ஹசரங்கா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் முறையே ஏப்ரல் 10 மற்றும் ஏப்ரல் 14 ஆகிய தேதிகளில் அணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பாங்கர் உறுதிப்படுத்தினார். ஏப்ரல் 10 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக பெங்களூருவில் விளையாட உள்ள போட்டியில் நியூசிலாந்தில் இருந்து பயணித்து அன்று வந்து இறங்கும் அவர் விளையாட முடியுமா என்பது உறுதியாக தெரியவில்லை என்று சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார். "கரண் ஷர்மாவும் அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி வருவதால் அதுவும் கணக்கில் கொள்ள வேண்டிய விஷயம்தான்.
ஹேசில்உட் 17-ஆம் தேதி நடைபெறும் சென்னை அணியுடனான போட்டியில் விளையாட தயார்படுத்த விரும்புகிறோம்", என்று கூறியுள்ளார்.