ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை  ஹைதராபாத் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


ஐபிஎல் சீசன்  கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் சென்னை, டெல்லி, மும்பை,கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான்,குஜராத், லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு அணியும் தங்களது உள்ளூர் மைதானத்தில் விளையாடி வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுவரை மும்பை, ஹைதராபாத் அணிகள் தவிர்த்து மற்ற 8 அணிகளும் 2 போட்டிகளில் விளையாடி விட்டனர். 


இதனிடையே இன்று நடைபெறும் 10வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 7.30 மணியளவில் லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. 


இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை


லக்னோ அணியை பொறுத்தவரை தனது முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேசமயம் சென்னை அணிக்கு எதிரான 2வது போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலமாக விளங்கும் அந்த அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதேசமயம் ஹைதராபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடன் 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. உள்ளூர் மைதானத்தில் அந்த அணி தோல்வியடைந்தது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக மாறி விட்டது. இதனால் தனது முதல் வெற்றியை பெற அந்த அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே மோதியுள்ளது. கடந்தாண்டு நடந்த அந்த போட்டியில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


மைதானம் எப்படி? 


லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 6 டி20 போட்டிகள் நடந்துள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்யவே விரும்பும். அதேபோல் இம்மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. இம்மைதானத்தில் மொத்தம் எடுக்கப்பட்ட  70 விக்கெட்டுகளில் 51 விக்கெட்டுகள் வேகப்பந்து வீச்சாளர்களால் எடுக்கப்பட்டுள்ளது. 


தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் வீரர் (impact Player) யார்? 


லக்னோ அணியை பொறுத்தவரை ஆயுஷ் படோனி, யாஷ் தாக்கூர், மனன் வோஹ்ரா, பிரேரக் மன்கட், அமித் மிஸ்ரா ஆகியோர் இம்பேக்ட் வீரர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. அதேபோல் ஹைதராபாத் அணியில் விவ்ராந்த் சர்மா, மயங்க் மார்கண்டே, உபேந்திர யாதவ், கார்த்திக் தியாகி, அப்துல் சமத்  ஆகியோர் இருப்பார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.