பெங்களூரு - டெல்லி இடையே நேற்று பகலிரவு நடந்த போட்டியில் வென்று பெங்களூரு அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி அதிரடியாக தொடங்க, ரன் 200-ஐத் தாண்டும் என்ற எண்ணம் இருந்தது.


ஆனால் ஹர்ஷல் பட்டேலை நம்பர் 5 இல் இறக்கி, பேட்டிங் ஆர்டரை குழப்பி இடையில் வேகத்தை விட்டு 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த பேட்டிங் பிட்ச்சிற்கு இது கொஞ்சம் குறைவு எனக் கருதப்பட்ட நிலையில், நிலைகுலைந்து போனது டெல்லி அணி பேட்டிங். ப்ரித்வி ஷா, மார்ஷ், யஷ் துல் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆக, வார்னரும் கொஞ்ச நேரம்தான் தாக்குப்பிடித்தார்.



கவனத்தை ஈர்த்த அறிமுக பந்துவீச்சாளர்


பின்னர் விக்கெட்டுகள் மளமளவென சரிய, மனிஷ் பாண்டே மட்டும் நிலைத்து ஆடி அரைசதம் அடித்து ஹசரங்கா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். என்னதான் பேட்டிங்கில் சில குளறுபடிகள் நடந்திருந்தாலும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை எட்டிப்பிடித்தது. அதிலும் குறிப்பாக நேற்றைய போட்டியில் அறிமுகமான விஜயகுமார் வைஷாக் தனது பந்துவீச்சால் அனைவரையும் கவர்ந்தார். தனது முதல் போட்டியிலேயே முதல் விக்கெட்டாக வார்னரை ஆட்டமிழக்க செய்து அசத்தினார்.


தொடர்புடைய செய்திகள்: Watch Video: கெத்து காட்டிய கோலி… கை கொடுக்காமல் சென்ற கங்குலி… ஜாம்பவான்களிடையே அனல் பறந்த மோதல்..!


விஜயகுமார் வைஷாக்


அவர் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை சரியாக அடிக்காத வார்னர், மிட்விக்கெட் திசையில் நின்ற விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆட்டத்தை மாற்றும் விக்கெட்டை எடுத்த அவரை ஆர்சிபி அணியினர் கொண்டாடினர். மேலும் 13 வது ஓவரை வீசிய அவர், பயங்கரமான ஃபார்மில் இருக்கும் அக்ஸர் பட்டேலை வீழ்த்தி ஆச்சர்யப்படுத்தினார்.


டெல்லி அணிக்கு பல நல்ல இன்னிங்ஸ்களை ஆடிக்கொடுத்த அவரை, முக்கியமான நேரத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணியின் வெற்றியை உறுதி செய்தார். மேலும் இன்னொரு விக்கெட் வீழ்த்தி தனது அற்புதமான அறிமுகப் போட்டியின் 4 ஓவர்களை முடித்தார். லலித் யாதவை ஆட்டமிழக்க செய்த அவர், மொத்தமாக 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகள் எடுத்து, 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து எகனாமி 5 இல் பந்து வீசி எல்லோர் கவனத்தையும் ஈர்த்தார். 



யார் இந்த வைஷாக்?


வைஷாக் ஐபிஎல் 2023 ஏலத்தில் விற்கப்படாமல் போனவர் ஆவார். 26 வயதான கர்நாடக வேகப்பந்து வீச்சாளர், இந்த சீசனில் காயமடைந்த ரஜத் பட்டிதாருக்குப் பதிலாக RCB ஆல் அணியில் சேர்க்கப்பட்டார். வந்த முதல் ஆட்டத்திலேயே தனது இருப்பை வலுவாக பதிவு செய்து மாஸ் காட்டியுள்ளார். இந்த வேகப்பந்து வீச்சாளர் கர்நாடகா அணிக்காக இதுவரை 10 முதல் தர போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிப்ரவரி 2021 இல் சையத் முஷ்டாக் அலி டிராபியில் மாநில அணிக்காக அவர் அறிமுகமானார். அவர் 14 டி20 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வைஷாக் கர்நாடகாவுக்காக டி20களில் 6.92 எகனாமியில் பந்து வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.