ஐ.பி.எல். தொடரில் வான்கடே மைதானத்தில் மும்பை அணி நேற்று களமிறங்கிய போட்டி ஐ.பி.எல். ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், மறக்க முடியாத அனுபவத்தையும் தந்த போட்டி என்றே கூறலாம். ஏனென்றால், நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆஸ்தான கேப்டன் ரோகித்சர்மா  முதன்முறையாக இம்பேக்ட் ப்ளேயர் லிஸ்டிற்கு சென்றார்.


மும்பை அணிக்கு கேப்டனாக முதன்முறையாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். மேலும், மும்பை ரசிகர்களும், சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களும் ஆவலுடன் இத்தனை காலமாக காத்துக் கொண்டிருந்ததை நிறைவேற்றும் வகையில் ஜூனியர் சச்சின் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக களமிறங்கினார்.




மும்பை அணிக்காக களமிறங்கிய அர்ஜூன் டெண்டுல்கர் 2 ஓவர்கள் வீசிய 17 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மும்பை அணிக்காக முதன்முறையாக களமிறங்கிய அர்ஜூன் டெண்டுல்கருக்கு பிரபலங்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ. அணியின் முன்னாள் தலைவருமான சவ்ரவ் கங்குலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “மும்பை அணிக்காக அர்ஜூன் களமிறங்கியதை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி. சாம்பியன் தந்தை கண்டிப்பாக பெருமைப்படுவார். வாழ்த்துகள் அர்ஜூன்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.




இந்திய அணிக்காக சச்சின் டெண்டுல்கர் – சவ்ரவ் கங்குலி இருவரும் இணைந்து தொடக்க வீரர்களாக பல சாதனைகளை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் நீண்ட கால நண்பர்கள் ஆவர். கடந்த 2022ம் ஆண்டு நடந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரூபாய் 30 லட்சம் தொகைக்காக அர்ஜூன் டெண்டுல்கர் எடுக்கப்பட்டார்.


23 வயதான அர்ஜூன் டெண்டுல்கர் இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஆவார். மேலும், இடது கை பேட்ஸ்மேனும் ஆவார். அர்ஜூன் டெண்டுல்கர் இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் ஆடியுள்ளார். மேலும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 7 போட்டிகளிலும் 9 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐ.பி.எல். போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 78 போட்டிகளில் 1 சதம் 13 அரைசதங்கள் உள்பட 2334 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக சதங்களை தன்வசம் வைத்துள்ள  கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: CSK vs RCB, IPL 2023: ஐபிஎல் தொடரில் சென்னையிடம் மரண அடி.. இன்று திருப்பி கொடுக்குமா பெங்களூரு? சிஎஸ்கேவிடம் வித்தை காட்டுவாரா டுப்ளெசி?


மேலும் படிக்க: IPL Points Table: ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் டாப்பில் ராஜஸ்தான்..! மும்பைக்கு கிடைத்தது என்ன?.. மற்ற அணிகள் நிலை?