குஜராத் அணிக்கு எதிரான போட்டியில்  ராஜஸ்தான் வீரர் போல்ட் பிடித்த கேட்ச் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இது நடப்பு தொடரில் மிகவும் நகைச்சுவையாக பிடிக்கப்பட்ட கேட்ச் ஆகவும் மாறியுள்ளது.


ராஜஸ்தான் - குஜராத் மோதல்:


குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து விரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். டிரெண்ட் போல்ட் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை சாஹா அடிக்க அது பல அடி உயரத்திற்கு காற்றில் பறந்தது.






முட்டி மோதிக்கொண்ட வீரர்கள்:


அந்த பந்தை கேட்ச் பிடிக்க ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மேயர் மற்றும் ஜுரெல் ஆகியோர் ஆர்வம் காட்டினர். ஒருகட்டத்தில் மூன்று பேரும் பந்தை மட்டுமே மேல்நோக்கி பார்த்தவாறு ஓடி வந்து, ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக்கொண்டனர். அப்போது, சாம்சனின் கையில் விழுந்து பந்து வெளியே எகிறியது. இதை அருகிலிருந்து பார்த்துக்கொண்டு இருந்த போல்ட், கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாரித்துக்கொண்டு, சஞ்சு சாம்சனின் கையில் இருந்து வெளியே எகிறி குதித்த பந்தை அநாயசமாக கேட்ச் பிடித்து சாஹாவை அவுட்டாக்கினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதோடு, இதுதொடர்பாக பல்வேறு மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன.


ராஜஸ்தான் வெற்றி:


போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக மில்லர் 46 ரன்களையும், கில் 45 ரன்களையும் சேர்த்தனர். இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சன் மற்றும் ஹெட்மேயரின் அதிரடியான அரைசதத்தால், 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் அந்த அணி விளையாடியுள்ள 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று ஒன்றில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது. இதனால், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. நடப்பு தொடரில் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளின் பட்டியலில், ராஜஸ்தான் அணி முதலிடம் வகிக்கிறது. இதனிடையே, லக்னோ, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.