மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள பெங்களூர் அணிக்கும், புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள ஹைதராபாத் அணிக்கும் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது அவசியம் ஆகும்.


இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் ப்ளே ஆப் வாய்ப்பை பிரகாசமாக்கி செல்ல முடியும். ஹைதராபாத் அணியைப் பொறுத்தமட்டில் அந்த அணிக்கு வில்லியம்சன், அபிஷேக் சர்மா நல்ல தொடக்கத்தை அளித்து வருகின்றனர். ராகுல் திரிபாதி பேட்டிங்கில் அசத்தி வருகிறார். நிகோலஸ் பூரண் அதிரடி காட்ட வேண்டியது அந்த அணிக்கு அவசியம் ஆகும். ஷசாங்க்சிங் மிடில் ஆர்டரில் அதிரடி காட்டுவார் என்று நம்பலாம்.




பந்துவீச்சில் உம்ரான் மாலிக் அதிவேக பந்துவீச்சாளராக வலம் வருகிறார். அவருக்கு நடராஜன் தகுந்த பக்கபலமாக உள்ளார். புவனேஷ்குமார் வேகத்தில் கலக்கினால் எதிரணிக்கு நெருக்கடி ஏற்படும். சுழலில் வாஷிங்டன் சுந்தர் கலக்க உள்ளார். மார்கோ ஜென்சன் வேகத்தில் கலக்க உள்ளார். இவர்களை சமாளித்து ஆடினால் பெங்களூர் அணி நல்ல ரன்களை குவிக்கலாம்.


பெங்களூர் அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக பாப் டுப்ளிசிஸ் உள்ளார். கடந்த சில போட்டிகளில் சிறப்பாக ஆடாத டுப்ளிசிஸ் இந்த போட்டியில் கலக்க வேண்டியது அவசியம். அவருடன் பார்முக்கு திரும்பியுள்ள விராட்கோலி தனது அதிரடியை காட்ட வேண்டியது பெங்களூருக்கு தேவையான ஒன்றாகும். ஆல் ரவுண்டரான மேக்ஸ்வெல் இந்த போட்டியில் விளாசுவார் என்று நம்பலாம்.


கடந்த போட்டியில் கலக்கிய மஹிபால் லோம்ரார் இந்த போட்டியிலும் மிடில் வரிசையில் அதிரடி காட்டினால் பெங்களூருக்கு பக்கபலமாக அமையும். அவருடன் ஷாபாஸ் அகமதுவும், ரஜத் படிதாரும் அதிரடி காட்ட வேண்டியது அவசியம், பெங்களூர் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தினேஷ் கார்த்திக் இந்த போட்டியிலும் கடைசி ஓவர்களில் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.




பெங்களூர் அணியின் பந்துவீச்சுக்கு ஹர்ஷல் படேலும், ஹேசில்வுட்டும் மிகப்பெரிய பலமாக உள்ளனர். இவர்களது வேகம் எதிரணி விக்கெட்டுகளை சீட்டுக்கட்டு போல சரிக்கும் ஆற்றல் கொண்டது. இவர்களுடன் முகமது சிராஜூம் அசத்தலாக பந்துவீச வேண்டியது அவசியம். சுழலில் ஹசரங்காவும், மேக்ஸ்வெல்லும் நிச்சயம் பெங்களூருக்கு பக்கபலமாக நிற்பார்கள். பிரபுதேசாய் அணியில் களமிறங்கினால் அவரும் அதிரடி காட்டுவார்.


இந்த போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும். இரு அணிகளும் மோதிய 20 போட்டிகளில் ஹைதராபாத் 12 போட்டியிலும்,  பெங்களூர் 8 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக ஹைதராபாத்திற்கு எதிராக 69 ரன்களில் சுருண்ட பெங்களூர் இந்த போட்டியில் அதற்கு பழிதீர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண