இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியின் முக்கியமான தூணாகவும் திகழ்ந்தவர் புஜாரா. இந்தியாவிற்காக 95 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6713 ரன்களை குவித்தவர் புஜாரா. இந்தியாவிற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த புஜாரா, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்காமல் திணறி வந்தார். இந்நிலையில், ரோஹித் சர்மா டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்றபின் நடந்த முதல் டெஸ்ட் தொடரான இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய 2 சீனியர் வீரர்களுமே புறக்கணிக்கப்பட்டனர்.






அதன்பின்னர் ரஹானே தற்போது ஐபிஎல்லில் கேகேஆர் அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் புஜாராவை ஐபிஎல் அணிகளும் ஏலத்தில் எடுக்காததால், இங்கிலாந்தில் நடந்துவரும் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடி வருகிறார். இந்திய டெஸ்ட் அணியில் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க, கவுண்டியில் சிறப்பாக ஆடுவது ஒன்றே வழி என்பதை உணர்ந்து கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக அபாரமாக விளையாடி சதங்களை விளாசிவருகிறார். ஏற்கனவே இரண்டு இரட்டை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்திருந்த சட்டேஸ்வர் புஜாரா தற்போது தொடர்ச்சியாக நான்காவது போட்டியிலும் சதத்தை எட்டியுள்ளார். வழக்கமாக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் புஜாரா இம்முறை கொஞ்சம் வேகம் காட்டுகிறார். அடித்து ஆடும் நோக்கில் களத்தில் நின்று பந்துகளை வெளுத்து வாங்குகிறார். இவர் அவரது செஞ்சுரியை 133 பந்துகளில் எட்டினார். 13 பவுண்டரிகளை விளாசியதுடன் 2 சிக்ஸர்களும் அடித்து அதகளம் செய்துள்ளார். 






குறிப்பாக உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஷஹீன் அப்ரிடி வீசிய ஒரு ஷார்ட் பாலை சிக்ஸருக்கு அனுப்பியது அவரது ஃபார்மில் உச்ச நிலையை உணர்த்தியது. அதுமட்டுமின்றி அவரது பந்துகளில் சில அருமையான ஆர்தடாக்ஸ் ஷாட்கள் மூலம் பவுண்டரிகள் குவித்தது குறிப்பிடத்தக்கது.


மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், புஜாரா 149 பந்துகளுக்கு 16 பவுண்டரி, மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 125 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். சசெக்ஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 236 ரன்கள் குவித்து மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. முதல் இன்னிங்சில் 392 ரன் குவித்திருந்தது. மிடில்செக்ஸ் அணி முதல் இன்னிங்சில் 358 ரங்களுக்கு ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. 


இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் முறையே, 6, 201*, 109, 12, 203, 16, 125* என்று ரன்கள் குவித்து மொத்தமாக 582* ரன்கள் குவித்துள்ளார். இதில் மூன்றாவது போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றதால் அதில் விளையாடிய ஒரே ஒரு இன்னிங்சிலும் 203 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.