15வது டாடா ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியடைந்து மும்பை அணி தொடரை விட்டு வெளியேறியுள்ள நிலையில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த சூழலில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.


சென்னை அணியைப் பொறுத்தவரையில் கடந்த போட்டியில் வெற்றி பெற்றது சென்னை வீரர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். அதேசமயத்தில் இனி வரும் போட்டிகள் அனைத்திலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை  அணி உள்ளது. சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் – உத்தப்பா ஜோடி மிகப்பெரிய ஸ்கோரை குவிக்க வேண்டியது கட்டாயம். அம்பத்தி ராயுடுவும், ஷிவம் துபேவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது சென்னை அணிக்கு அவசியம்.




அதேபோல, ஆல்ரவுண்டரான மொயின் அலி மற்றும் கேப்டன் ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்தலாக செயல்பட்டால்தான் சென்னை அணி சவால் அளிக்க இயலும். முகேஷ் சவுத்ரி, மதீஷா பதிரா, சான்ட்னர் ஆகியோரும் பந்துவீச்சில் அசத்துவார்கள் என்று நம்பலாம். சென்னை அணி பந்துவீச்சை வலுப்படுத்தினால்தான் வெற்றி வசப்படும். முன்னாள் கேப்டன் தோனி கடந்த போட்டியைப் போல இந்த போட்டியிலும் அசத்தலான பேட்டிங்கைத் தொடங்குவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.


ஐ.பி.எல். தொடரில் 4 முறை சாம்பியனாக சென்னை வலம் வந்தாலும் இந்த தொடரில் சென்னையை காட்டிலும் பஞ்சாப் அணியே வலுவாக உள்ளது. பஞ்சாப் அணியில் கேப்டன் மயங்க் அகர்வாலும், தொடக்க வீரர் ஷிகர்தவானும் அசத்தலான தொடக்கத்தை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும். விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடி வருகிறார். லியாம் லிவிங்ஸ்டனின் அதிரடியான பேட்டிங் இந்த போட்டியில் கண்டிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.




இதுவரை பேட்டிங்கில் ஜொலிக்காத ஜானி பார்ஸ்டோ இந்த போட்டியில் அசத்தினால் பஞ்சாபிற்கு பலமாக அமையும். தமிழக வீரர் ஷாரூக்கான் தனது அதிரடியை காட்டினால் பஞ்சாப் ரன் எகிறும். பந்துவீச்சில் ரபாடா தூணாக உள்ளார். வைபவ் அரோரா, அர்ஷ்தீப்சிங் ஆகியோர் அசத்தினால் சென்னைக்கு நெருக்கடி ஏற்படும்.


இரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் 16 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னைக்காக பஞ்சாப் அணிக்கு எதிராக சுரேஷ் ரெய்னா 719 ரன்களை குவித்துள்ளார். பஞ்சாப் அணிக்காக சென்னைக்கு எதிராக கே.எல்.ராகுல் 435 ரன்களை விளாசியுள்ளார். ப்ரோவோ அதிகபட்சமாக 15 விக்கெட்டுகளையும், ஷமி அதிகபட்சமாக 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண