மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் 52வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டி ஆகும்.
புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் ஆடி 6 வெற்றி 4 தோல்விகளுடன் 3வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 10 போட்டிகளில் ஆடி 5 வெற்றி 5 தோல்விகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் முக்கியம் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்று எதிர்பார்க்கலாம்.
பஞ்சாப் அணிக்கு இந்த ஆட்டத்திலும் ஜானி பார்ஸ்டோ, ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம். பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பார்ஸ்டோவும் அதிரடிக்கு திரும்பினால் நிச்சயம் பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய பலம்.
அதேபோல, பனுகா ராஜபக்ஷேவும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வௌிப்படுத்தி வருகிறார். இந்த ஆட்டத்திலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். சூழலுக்கு ஏற்ப லியாம் லிவிங்ஸ்டனை முன்னாள் இறக்கிவிட்டு, மயங்க் அகர்வால் அவருக்கு அடுத்த இறங்குவது அணிக்கு நல்ல பலனை அளிக்கிறது. கடந்த போட்டியில் அதிரடி காட்டிய லிவிங்ஸ்டன் இந்த போட்டியிலும் அதிரடி காட்டினால் பஞ்சாப் ரசிகர்கள் உற்சாகம் அடைவார்கள். மயங்க் அகர்வால் அதிரடியாக ஆடினால் பஞ்சாபிற்கு மிகப்பெரிய பலமாக அமையும்.
பந்துவீச்சில் ரபாடா எதிரணிக்கு மிகப்பெரிய சிம்மசொப்பனமாக திகழ்கிறார். அவர் இன்றும் பந்துவீச்சில் அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம். ரிஷி தவான் அவருக்கு ஒத்துழைப்பு அளிப்பார் என்று நம்பலாம். அர்ஷ்தீப் சிங்கும் வேகத்தில் கலக்குவார் என்று நம்பலாம். ராகுல் சஹார் சுழலில் எதிரணிக்கு குடைச்சல் கொடுப்பார். லிவிங்ஸ்டனும் தனது சுழலில் விக்கெட் வேட்டை நடத்துவது பஞ்சாபிற்கு பலமாக அமைகிறது.
ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணி பலமாக உள்ளது. அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக பட்லர் உள்ளார். 3 சதங்களை இந்த தொடரில் விளாசியுள்ள பட்லர் இன்றும் அதிரடியாக ஆடுவார் என்று நம்பலாம். அவருக்கு படிக்கல் ஒத்துழைப்பு அளித்தால் சிறப்பாக இருக்கும். சஞ்சு சாம்சன் தனது அதிரடியை இந்த போட்டியில் காட்ட வேண்டியது கட்டாயம் ஆகும். ரியான் பராக் அதிரடியாக ஆடுவது அவசியம். ஹெட்மயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மிகப்பெரிய ஸ்கோரை எட்டலாம்.
பந்துவீச்சில் போல்ட், பிரசீத் கிருஷ்ணா வேகத்தில் அசத்துவார்கள். சுழலில் அஸ்வின், சாஹல் மிகப்பெரிய பலமாக உள்ளனர். மெக்காயும் வேகத்தில் அசத்தினால் பஞ்சாபிற்கு சிக்கலாக இருக்கும். இந்த போட்டி 3.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் இதற்கு முன்பு ஆடிய 23 போட்டியில் பஞ்சாப் 10 போட்டியிலும், ராஜஸ்தான் 13 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக ஆடிய 5 போட்டியில் ராஜஸ்தான் 3 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்