ஐ.பி.எல். தொடரின் 4வது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் முதன்முறையாக ஐ.பி.எல். தொடரில் களமிறங்கியுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
நடப்பு ஐ.பி.எல். போட்டி முதல் 10 அணிகள் விளையாட உள்ளன. இந்த தொடரில் புதிய அணிகளாக அறிமுகமாகியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் தங்களது முதல் போட்டியில் இன்று களமிறங்குகின்றனர். இதனால். ஐ.பி.எல். ரசிகர்கள் இடையே ஐ.பி.எல்.வரலாற்றில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தூணாக விளங்கி வந்த ஹர்திக் பாண்ட்யா களமிறங்குகிறார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் பஞ்சாப் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்த கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
குஜராத் அணியில் சுப்மன் கில், மேத்யூ வேட், விருத்திமான் சஹா, டேவிட் மில்லர், விஜய் சங்கர் ஆகியோர் பேட்டிங்கில் கலக்க காத்துள்ளனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய கம்பேக்கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் பெர்குசன், முகமது ஷமி, வருண் ஆரோன் ஆகியோர் உள்ளனர். உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் ரஷீத்கானுடன் ராகுல் திவேதியாவும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலமான அணியாகவே உள்ளது. கேப்டன் கே.எல்.ராகுலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த குயின்டின் டி காக்கும் தொடக்க வீரர்களாக கலக்க உள்ளனர். மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, மனன் வோாரா பேட்டிங்கில் அசத்த உள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் குருணால் பாண்ட்யா ஆல் ரவுண்டராக களமிறங்குகிறார். பந்துவீச்சில் கிருஷ்ணப்ப கவுதம், துஷ்மந்த சமீரா, கடந்த ஐ.பி.எல்.லில் களமிறக்கிய ஆவேஷ்கான் ஆகியோர் உள்ளனர். வெளிநாட்டு வீரர் எவின் லீவிசும் பேட்டிங்கில் அசத்த உள்ளார்.
மும்பை வான்கடேவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் இரு அணிகளுமே தங்களது ஐ.பி.எல். வரலாற்றை வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டுவார்கள் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்