ஐ.பி.எல். தொடரில் 10வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் புனே மைதானத்தில் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய குஜராத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
குஜராத் அணியின் அதிரடி வீரர் மேத்யூ வேட் 1 ரன்னில் முஸ்தபிஷீர் பந்தில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு சுப்மன்கில்லும், விஜய் சங்கரும் சிறிது நேரம் நிதானமாக ஆடினர். ஆனாலும், அணியின் ஸ்கோர் 44 ரன்களை எட்டியபோது விஜய்சங்கர் 20 பந்தில் 1 பவுண்டரியுடன் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும், சுப்மன்கில்லும் சிறிது நேரம் நிதானமாக ஆடினர்.
பின்னர், ஹர்திக் பாண்ட்யா தனது வழக்கமான அதிரடி ஆட்டத்திற்கு மாறினார். அவருடன் சுப்மன் கில்லும் மறுமுனையில் அதிரடியாக ஆடத்தொடங்கினர். இதனால், 11 ஓவர்களில் அந்த அணி 75 ரன்களை எடுத்தது. தொடக்கம் முதல் சிறப்பாக ஆடி வந்த சுப்மன்கில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவரது அரைசத உதவியுடன் குஜராத் 13 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. அணியின் ஸ்கோர் 109 ரன்களை எட்டியபோது ஹர்திக்பாண்ட்யா 27 பந்தில் 4 பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் தொடக்க வீரர் சுப்மன் கில் தனது ஆட்டத்தை அதிரடி கியருக்க மாற்றினார். அதிரடியாக ஆடிய அவர் 46 பந்தில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 84 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லரும், ராகுல் திவேதியாவும் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடினர். கடைசியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது.
பின்னர், 172 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் டிம் செய்பிரட் 3 ரன்களிலும், பிரித்விஷா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 4 பவுண்டரிகளை விளாசிய மன்தீப்சிங் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து ஜோடி சேர்ந்த டெல்லி கேப்டன் ரிஷப்பண்ட் மற்றும் லலித்யாதவ் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த சூழலில், லலித்யாதவ் 25 ரன்களில் ரன் அவுட்டானர். அடுத்து ரோவ்மென் பாவெல் களமிறங்கினார். 12 ஓவர்களில் டெல்லி அணி 100 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, களமிறங்கிய ரோவ்மென் பாவெல் அதிரடியாக ஆடத்தொடங்கினார். அவருடன் இணைந்து ரிஷப் பண்டும் அதிரடியாக ஆடத்தொடங்கினார். கடைசி 6 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது. அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த டெல்லி கேப்டன் ரிஷப்பண்ட் 29 பந்தில் 7 பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அக்ஷர்படேலும் 8 ரன்களுக்கு வெளியேறினார். ஷர்துல் தாக்கூரும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
டெல்லி அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த ரோவ்மென் பாவெல் 12 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 20 ரன்கள் எடுத்து ஷமி பந்தில் அவுட்டானர். கடைசியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெர்குசன் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையம், ஹர்திக்பாண்ட்யா, ரஷீத்கான் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்