மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி ஜோஸ் பட்லரின் சதம் மற்றும் ஹெட்மயரின் அதிரடியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.




சிக்ஸர் அடித்து தனது அதிரடியை தொடங்கிய ரோகித்சர்மா 10 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா இருவரும் ஜோடி சேர்ந்தனர். திலக் வர்மா ராஜஸ்தான் பந்துவீச்சை சரமாரியாக விளாசினார். அவருக்கு மறுமுனையில் இஷான் கிஷனும் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இதனால், மும்பை அணியின் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.




அணியின் ஸ்கோர் 12 ஓவர்களில் 121 ரன்களை எட்டியபோது 43 பந்தில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 54 ரன்கள் எடுத்திருந்த இஷான்கிஷன் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் நம்பிக்கை தூணாக விளங்கிய திலக் வர்மா அஸ்வின் சுழலில் போல்டானார். அவர் 33 பந்தில் 3 பவுண்டரி 5 சிக்ஸருடன் 61 ரன்களை எடுத்தார். அடுத்து களமிறங்கிய கீரன் பொல்லார்ட் சற்று நிதானமாக பொறுப்புடன் ஆடினார், ஆனால், மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதத்தில் யாரும் ஆடவில்லை. டிம் டேவிட் 1 ரன்னிலும், டேனியல் சாம்ஸ் 0 ரன்னிலும், முருகன் அஸ்வின் 6 ரன்னிலும் அவுட்டாக 8வது விக்கெட்டாக பொல்லார்ட் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராஜஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


ராஜஸ்தான் அணியில் நவ்தீப் சைனி, சாஹல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். போல்ட், பிரசீத்கிருஷ்ணா, அஸ்வின் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணியில் பட்லர் 66 பந்தில் 11 பவுண்டரி 5 சிக்ஸருடன் 100 ரன்களை எடுத்தார். ஹெட்மயர் 14 பந்தில் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 35 ரன்கள் எடுத்தார்.




இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 போட்டியில் ஆடி 2லும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மும்பை அணி ஆடிய 2 போட்டியிலும் தோல்வியடைந்து 9வது இடத்தில் உள்ளது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண