ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணி அளவில் நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த தொடர் தொடங்கியது முதல் இரு அணிகளும் பலமிகுந்த அணிகளாக வலம் வருகின்றன.
ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணிக்கு மிகப்பெரிய பலமே ஜோஸ் பட்லர்தான். தொடக்கம் முதல் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜோஸ் பட்லர் அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். அவருக்கு தேவ்தத் படிக்கல் நல்ல ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம், அவரும் பார்முக்கு திரும்பிவிட்டால் ஸ்கோர் எகிறும். ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் இதுவரை தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. அவர் அதிரடியை வெளிப்படுத்தினால் நிச்சயம் ராஜஸ்தான் இமாலய இலக்கை குவிக்கும்.
அதிரடி வீரர் ஷிம்ரன் ஹெட்மயர், ரியான் பராக்கும் பேட்டிங்கில் அசத்தினால் நிச்சயம் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம். கருண் நாயருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவரும் பேட்டிங்கில் அசத்துவார். பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரசித் கிருஷ்ணாவும் வேகத்தில் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம். சுழலில் அஸ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் கூட்டணி இந்த போட்டியில் அசத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.
டெல்லி அணியை பொறுத்தவரையில் ராஜஸ்தான் அணிக்கு எந்தவொரு வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த போட்டியிலும் நிரூபிப்பார்கள் என்று நம்பலாம். தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா, டேவிட் வார்னர் அதிரடியான ஆட்டத்தை இந்த போட்டியிலும் வெளிப்படுத்தினால் அந்த அணியின் பின்வரிசை வீரர்கள் எளிதில் ரன்களை குவிப்பார்கள். கேப்டன் ரிஷப்பண்ட்டும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இந்த தொடரில் இதுவரை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாத ரோவ்மென் பாவெல் இந்த போட்டியிலாவது தனது அதிரடியை காட்டினால் டெல்லிக்கு கூடுதல் பலமாக அமையும். லலித்யாதவ் இக்கட்டான நேரத்தில் அசத்தி வருகிறார். அக்ஷர் படேல் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆல்ரவுண்டர்களாக டெல்லி அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளனர். சுழலில் குல்தீப் யாதவ் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகின்றனர். கலீல் யாதவும் வேகத்தில் கட்டுக்கோப்பாக வீசினால் ராஜஸ்தானுக்கு நெருக்கடி அதிகரிக்கும்.
இரு அணிகளுக்கும் இதுவரை 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. டெல்லி அணியும், ராஜஸ்தான் அணியும் தலா 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. வான்கடேவில் மோதிய 2 போட்டியிலும் ராஜஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக ஆடிய 5 போட்டிகளில் டெல்லி அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் ஆடி 4 வெற்றி 2 தோல்வியுடன் 3வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 6 போட்டிகளில் ஆடி 3 வெற்றி 3 தோல்விகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இதனால், புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளும் வெற்றி பெற முனைக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்