தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கடந்த மாதம் வென்றது. இதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை நடைபெற்றது. இதனால் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு சென்னை அணிக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் சென்னை கலைவானர் அரங்கில் இன்று சென்னை அணிக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, வீரர்கள் மற்றும் அதன் உரிமையாளர் என்.ஶ்ரீனிவாசன் மற்றும் அவருடைய மகள் ரூபா குருநாத் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த பாராட்டு விழா தொடக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியின் ஜெர்சியை பரிசாக வழங்கினர். 


சிஎஸ்கே அணியின் பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அணியினருக்கு வெற்றிபெற்ற கோப்பையை வழங்கினார். தொடர்ந்து முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசுகையில், முதலமைச்சராக நான் இங்கு வரவில்லை, தோனியின் ரசிகராகவே இங்கு வந்தேன்
என்று தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அவர், எனது தந்தை, எனது பேரக்குழந்தைகள் என எல்லாரும் தோனியின் ரசிகர்கள் தான். சென்னை என்றாலே சூப்பர் தான், அது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.  எனக்கு கிரிக்கெட்டில் சிறு வயது முதல் ஆர்வம் உண்டு. நானும் விளையாடி இருக்கிறேன். கடந்த 10 நாட்களாக பெய்துவரும் மழைக்கான நிவாரண பணிகள் பற்றி தான் யோசித்து கொண்டிருக்கிறேன். கோட்டையில் இருந்தாலும் குடிசைகள் பற்றி நினைக்க வேண்டும் என்று எங்களது தலைவர் கலைஞர் கருணாநிதி எங்களை உருவாக்கினார் என்றார். 


மேலும், என்னதான் தோனி ஜார்கண்ட்டில் பிறந்து இருந்தாலும் தமிழகத்தின் செல்லப்பிள்ளை ஆகிவிட்டார். தமிழர்கள் பச்சை தமிழர்கள் என்றால் தோனி மஞ்சள் தமிழர். அதை நிரூபிக்கும் வகையில் மீண்டும் அவரது தலைமையிலான சென்னை அணி கோப்பையை வென்றுள்ளது என்று தோனியை முதலமைச்சர் முக ஸ்டாலின் பாராட்டினார். 



முன்னதாக, இந்த விழாவில் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, “சென்னையுடன் என்னுடைய தொடர்பு 2008 ஐபிஎல் மூலம் நடந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே சென்னை எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்தது. ஏனென்றால் இங்கு தான் நான் அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினேன். என்னுடைய வாழ்க்கையில் நான் பல மாநிலங்களுக்கு சென்றுள்ளேன். ஆனால் அதில் சென்னை எனக்கு மிகவும் நிறையே விஷயங்களை கற்று கொடுத்துள்ளது. எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் எனக்கு கற்று கொடுத்துள்ளனர்.


மேலும், சென்னையின் ரசிகர்கள் எப்போதும் சிறப்பானவர்கள். ஏனென்றால் அவர்கள் தங்கள் அணிக்கு எதிராக விளையாடும் எந்த அணியாக இருந்தாலும் அதற்கு நல்ல மரியாதை கொடுப்பார்கள். அதற்கு உதாரணமாக சச்சின் எப்போதும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சென்னையில் விளையாடும் போது அவருக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. நாங்கள் விளையாடிய போது மட்டுமல்லாமல் சென்னை அணி ஐபிஎல் தொடரில் இல்லாத போதும் அதற்கு ரசிகர்கள் எப்போதும் ஆதரவு கொடுத்தனர். 



நான் எப்போதும் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை திட்டமிட்டு விளையாடுவேன். என்னுடைய கடைசி ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதைபோல் என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில் தான். அது இந்த வருடமா அல்லது அடுத்த வருடமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.