இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான தொடர்களில் ஒன்றாக ஐ.பி.எல். தொடர் விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஒரே அணியில் பல வீரர்களும் இணைந்து ஆடி வந்த நிலையில், அடுத்தாண்டு ஐ.பி.எல். ஒரு மாறுபட்ட கட்டத்தில் நடைபெற உள்ளது. வரும் ஐ.பி.எல். தொடரில் அனைத்து அணிகளும் மீண்டும் ஏலத்தில் பங்கேற்க உள்ளன. இதன்படி, அனைத்து அணியிலும் புதிய வீரர்கள் களமிறங்க உள்ளனர். இதனால், மும்பை, சென்னை, கொல்கத்தா என்ற பலமிகுந்த அணிகளும் முன்னணி வீரர்கள் அணி மாற உள்ளனர்.




இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நீண்ட காலமாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பின்பற்றறுவதில் இருந்து விலகியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அன்பால்லோ செய்த சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்பற்றத் தொடங்கியுள்ளார். இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், சென்னை அணி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிதான் 40 வயதான மகேந்திர சிங் தோனிக்கு கடைசி ஐ.பி.எல். போட்டியாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. நடப்பு சாம்பியனான சென்னை அணி மறுமுறையும் மகுடத்தை சூட்டி தோனியை சாம்பியனாகவே வழியனுப்ப வேண்டும் என்று சென்னை ரசிகர்கள் விரும்புகின்றனர். இதனால், சென்னை அணி மிகவும் வலுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




சஞ்சு சாம்ஸன் விக்கெட் கீப்பர் மட்டுமின்றி மிகவும் அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன். இந்திய அணிக்காக ஒரே ஒருநாள் போட்டியிலும், 10 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தாலும், ஐ.பி.எல். போட்டிகளில் அவர் கலக்கியுள்ளார். அவர் இதுவரை 121 ஐ.பி.எல். போட்டிகளில்  117 இன்னிங்சில் பேட்டிங் செய்து 3 ஆயிரத்து 68 ரன்களை குவித்துள்ளார். தொடக்க வீரரான அவர் 3 முறை சதமும், 15 முறை அரைசதமும் அடித்துள்ளார். சஞ்சு சாம்சன் அவற்றில் 12 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் தனது அதிகபட்ச ரன்னாக 119 ரன்களை எடுத்துள்ளார்.


ஏற்கனவே, சென்னை அணியில் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட்-பாப் டுப்ளிசிஸ் ஜோடி அசத்தி வருகிறது. இவர்களை தக்கவைக்கவே சென்னை அணி நிர்வாகம் விரும்பும். சஞ்சு சாம்சன் வருகை புரிந்தால் சென்னை அணியின் பேட்டிங் மேலும் வலுவடையும். அவரை ஒன்-டவுன் வீரராக களமிறக்க சென்னை அணி நிர்வாகம் விரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண