ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே சென்னை அணியின் கேப்டன் தோனியின் கடைசி சீசன் இதுதான் என பலரும் கூறினர். இதனால் தோனி மீது இருக்கும் அன்பினை வெளிப்படுத்தும் விதமாக தோனியின் ரசிகர்கள் மைதானங்களை நிரப்பி வருகின்றனர். இதனை பலரும் வியாபாரமாக்கி வருகின்றனர்.




இந்த ஐபிஎல் போட்டியில் வேறு எந்த அணியும் விளையாடும்போது மைதானம் நிரம்பி வழிவது கிடையாது. மைதானத்தை கடந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவிலும் கோடிக்கணக்கான மக்கள் சென்னை அணியின் போட்டியை காண்கிறார்கள். அதற்கு ஒரே காரணம் கேப்டன் கூல், தல என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் தோனிதான். ஆனால் இந்தியாவில் சென்னை அணி வேறு எந்த மைதானத்தில் விளையாடினாலும், மைதானம் நிரம்பி இருக்கணும். சேப்பாக்கத்தில் மட்டும் காலி இருக்கைகள் இருப்பதை காணமுடிகிறது. அதற்கான காரணம் சென்னை அணியின் ஸ்பான்ஸர்களுக்கு மைதானத்தில் உள்ள இருக்கைகளில் பாதிக்கும் மேலான டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் ஸ்பான்ஸர்கள் அந்த டிக்கெட்டுகளை சரியாக பயன்படுத்துவதில்லை. இதனால் தான் காலி இருக்கைகள் உள்ளன.


தோனியின் ரசிகர்களுக்கு விற்கப்படுவது ஸ்பான்ஸர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் போக மீதிதான். இதனை வாங்க ஆன்லைனில் ஆந்தை போல் முழித்துக்கொண்டும், டிக்கெட் கவுண்டர்களில் இயற்கை உபாதைகளைக் கூட பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நிற்பதால் தான் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி துளிகளில் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விடுகின்றன.




டிக்கெட் கிடைக்காதவர்கள் தோனி மீதான பேரன்பினால் டிக்கெட்டிகளை கூடுதல் விலைக்கும் வாங்க தயாராக உள்ளனர். இதனை பயன்படுத்திக் கொண்ட பலர் போட்டி டிக்கெட்டுகள் எங்களிடம் உள்ளது என ஆன்லைனில் விளம்பரம் அளிக்கின்றனர். இவர்களை நம்பும் தோனியின் ரசிகர்கள் அவர்கள் சொல்லும் தொகையினை அவர்களின் அக்கவுண்டுக்கு மாற்றி விடுகிறார்கள். அதன் பின்னர் போட்டி தினத்தன்று மைதானத்துக்கு வெளியில் நாங்கள் இருப்போம் அப்போது எங்களிடம் வந்து டிக்கெட்டுகளை வந்து வாங்கிக்கொள்ளலாம் என கூறி அவர்களை நம்பவைப்பதுடன், உங்களது நண்பர்கள் யாராவது இருந்தால் கூட சொல்லுங்கள், எங்களிடம் இன்னும் கூடுதல் டிக்கெட்டுகள் உள்ளன எனவும் கூறுகின்றனர்.






இதனை நம்பும் தோனியின் ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் மோசடிக்காரர்களுக்கு விளம்பரங்களை மேற்கொள்கின்றனர். இவர்களை நம்பும்  நட்பு வட்டாரங்களும் பணத்தினை கொடுத்து விடுகிறார்கள். இதனையெல்லாம் பயன்படுத்தி தங்களால் முடிந்த வரை பணத்தை சுருட்டிக்கொண்டு போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மோசடிக்காரர்கள் தங்களது மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்வதுடன் அவர்களது சமூக வலைதளப்பக்கங்களையும் டி-ஆக்டிவேட் செய்து விடுகின்றனர்.  இதனால் மோசடிக்காரர்களிடம் தோனியின் ரசிகர்கள் ஒரு டிக்கெட்டுக்காக ரூபாய் 8ஆயிரம் முதல் ரூபாய் 10 ஆயிரம் வரை செலுத்தி ஏமாந்து விடுகின்றனர்.




இப்படியான மோசடிக்கு ஆளான கீர்த்திகா என்பவர் தான் ஏமாற்றப்பட்டது குறித்து தனது சமூக வலைதளப்பக்கமான டிவிட்டரில் கூறியுள்ளார். அதேபோல் திருவல்லிக்கேணியைச் சேந்த ஒருவர் 20 டிக்கெட்டுகளுக்காக ரூபாய் 90 ஆயிரம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார். இப்படியான மோசடிகளுக்கு மத்தியில் தோனியின் ரசிகர்கள்  மாட்டிக்கொண்டு தங்களது பணங்களை இழந்து வருகின்றனர். தோனி என்ற ஒற்றை பெயரை பயன்படுத்தி மோசடி வேலையில் ஈடுபடுபவர்களிடம் தங்களது பணத்தினை இழக்காமல் இனியாவது தோனியின் ரசிகர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.