ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் பெங்களூரு - மும்பை அணிகள் இன்று மோதவுள்ள நிலையில்.  இரு அணிகள் தொடர்பான புள்ளி விவரங்களை நாம் இங்கு காணலாம். 


ஐபிஎல் சீசன்:


ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கிய நிலையில், விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்க, 10 அணிகளும் கடுமையாக போராடி வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அணிகளின் ரன்-ரேட்டும் நடப்பு தொடரில் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மும்பை - பெங்களூரு மோதல்:


இந்த சூழலில் தான் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில், மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று களமிறங்குகிறது. அதேநேரம், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்பதால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளிகளில் யார் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதை அறியலாம்.


நேருக்கு - நேர்:


ஐபிஎல் தொடர் தொடங்கிய 2008ம் ஆண்டு முதல் இரு அணிகளும் விளையாடி வரும் நிலையில், மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.  இதில் 17 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும், 14 முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடந்த 10 ஆட்டங்களில் மும்பை 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வான்கடே மைதானத்தில் இந்த இரு அணிகளும் மோத உள்ளன. இந்த மைதானத்தில் மும்பை அணியை பெங்களூரு வீழ்த்தி 8 ஆண்டுகள் அவது குறிப்பிடத்தக்கது. வான்கடே மைதானத்தில் இதுவரை இரு அணிகளும் 9 முறை மோதியுள்ள நிலையில், அதில் 6 முறை மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.


பேட்டிங், பந்துவீச்சில் சாதனைகள், சறுக்கல்கள்:


அதேசமயம் இவ்விரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதைப் போல பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வலுவாக உள்ளது.  பெங்களூரு அணி மும்பை அணிக்கு எதிராக அதிகப்பட்ச ஸ்கோராக 235 ரன்களும், குறைந்தப்பட்ச ரன்னாக 122 ரன்களையும் பதிவு செய்துள்ளது. இதேபோல் மும்பை அணி அதிகப்பட்சமாக 213 ரன்களையும், குறைந்தப்பட்சமாக 111 ரன்களையும் எடுத்துள்ளது. 


அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் - ஹர்ஷல் படேல், 18 


அதிக கேட்ச்களை பிடித்த வீரர் - கோலி, 18


அதிக ரன்களை எடுத்த வீரர் - கோலி, 909 ரன்கள்