இந்திய அணியின் முக்கியமான வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி.நடராஜன். டெத் ஓவர் மற்றும் யார்க்கர் வீசுவதில் ஸ்பெஷலிஸ்ட்டான நடராஜனுக்கு இன்று 31வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து, அவரது பிறந்தநாளுக்கு கிரிக்கெட் ரசிகர்களும், அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி வரும் நடராஜன் அந்த அணியின் மிகவும் முக்கியமான வீரர் ஆவார். ஹைதராபாத் அணியின் தவிர்க்க முடியாத வீரரான நடராஜனின் பிறந்த நாளை அந்த அணி வீரர்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். கேப்டன் கனே வில்லியம்சன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அணி வீரர்கள் அனைவரும் பங்கேற்று நடராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.






பின்னர், கேக் வெட்டி அந்த கேக்கை நடராஜன் கேப்டன் கனே வில்லியம்சன் மட்டுமின்றி பிற வீரர்களுக்கும் ஊட்டிவிட்டு மகிழ்ந்தார். பிற வீரர்கள் நடராஜன் முகத்தில் கேக்கை பூசி விளையாடினர். நடராஜனின் இந்த மகிழ்ச்சியான பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியினர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.




சேலத்தில் பிறந்த டி.நடராஜன் தனது அயராத உழைப்பாலும், திறமையாலும் இந்திய அணிக்குள் நுழைந்தவர். ஹைதராபாத் அணிக்காக ஆடியபோது டேவிட் வார்னரால் நடராஜன் திறமை வெளியுலகிற்கு கொண்டு வரப்பட்டது. நடராஜன் இதுவரை 1 டெஸ்ட் போட்டியில் ஆடி 3 விக்கெட்டுகளையும், 2 ஒருநாள் போட்டியில் ஆடி 3 விக்கெட்டுகளையும், 4 டி20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார், 25 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 22 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.


கடந்தாண்டு காயம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடாமல் ஓய்வில் இருந்த நடராஜன் மீண்டும் தற்போது கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பியுள்ளார். மேலும், இந்திய அணியின் வரலாற்று சிறப்பு மிக்க கப்பா டெஸ்ட் போட்டி வெற்றிக்கு நடராஜனின் பங்கும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண