ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்தது. அதைத் தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் சென்னை அணி நடப்புத் தொடரில் தொடர்ச்சியாக 3ஆவது போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக முதல் 3 போட்டிகளில் சென்னை அணி தோல்வி அடைவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் சென்னை அணியின் தோல்வி தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, “தோனி எப்போதும் பவுண்டரிகள் விளாசவில்லை என்றாலும் சிங்கிள் மற்றும் டபிள் எடுத்து கொண்டு இருப்பார். இதனால் அணியின் ஸ்கோர் உயரும். ஆனால் இந்தப் போட்டியில் தோனியால் அதைக் கூட செய்ய முடியவில்லை. அவரின் இந்த ஆட்டம் சிஎஸ்கே அணியை பெரிதும் பாதித்துள்ளது. இதுவும் சிஎஸ்கேவின் தோல்விக்கு ஒரு காரணம்.
அவர் விளையாடிய டாட் பந்துகளுக்கு பின்னர் ஒரு சில பவுண்டரிகள் அடித்தார். எனினும் அவை எதுவும் தோனியின் வழக்கமான ஆட்டத்தை போல் அமையவில்லை. மறுமுனையில் சிவம் துபே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவருக்கு துணையாக யாரும் இல்லை” எனக் கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கெனவே முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. அதன்பின்னர் இரண்டாவது போட்டியில் 200 ரன்களுக்கு மேல் அடித்தும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. அதைத் தொடர்ந்து நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடமும் தோல்வி அடைந்துள்ளது. ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து வரும் ஏப்ரல் 9ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் விளையாடுகிறது. அந்தப் போட்டியில் சென்னை அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா தன்னுடைய முதல் வெற்றியை எப்போது பதிவு செய்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்