ஐபிஎல் 16வது சீசனில் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. இதையடுத்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான பேச்சுவார்த்தைகள் இப்போதிலிருந்தே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
அப்படி என்னப்பா பேச்சு என்றால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, ஐபிஎல் 2024 தொடர் வெளிநாடுகளில் நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.
’ ஆஜ் தக்’ செய்தி நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியின்படி, “பிசிசிஐ விரைவில் ஐபிஎல் 2024 ம் ஆண்டு தொடர் குறித்து பெரிய அப்பேட் ஒன்றை வெளியிடலாம். நாடாளுமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கிறது. அதேபோல், ஐபிஎல் 2024 தொடரும் மார்ச்சில் நடைபெற இருக்கிறது. பாதுகாப்பு காரணமாக இந்த இரண்டு மிகப்பெரிய நிகழ்வுகளையும் நடத்துவது கடினம். இதற்காக வெளிநாடுகளில் ஐபிஎல் 2024 தொடரை நடத்த முயற்சிகள் மேற்கொள்ள இருக்கிறது. ஆனால், ஐபிஎல் இறுதிப் போட்டி மட்டும் இந்திய மைதானங்களில் மே முதல் அல்லது இரண்டு வாரத்தில் நடத்தப்படலாம். தற்போது, பிசிசிஐ -யின் கவனம் முழுவதும் 2023 உலகக் கோப்பையில் உள்ளது. இது முடிந்த பின்னரே எந்த விதமான முடிவும் எடுக்கப்படும்.
ஐபிஎல் 2024 சீசனை விரைவாக நடத்த முயற்சித்தாலும், நடத்து முடிக்க குறைந்தது 2 மாதங்கள் ஆகும். வெளிநாடு மைதானங்களில் ஐபிஎல் தொடர் நடத்தப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த 2009ம் ஆண்டு இதேபோன்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அப்போது, ஐபிஎல் தொடரானது தென்னாப்பிரிகாவில் நடத்தப்பட்டன.
அதேபோல், 2014ம் ஆண்டும் மக்களவை தேர்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் சில போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டன. நாக் அவுட் சுற்றுகள் மட்டுமே இந்தியாவில் அந்த ஆண்டு நடைபெற்றன. மேலும், 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தொடர் முழுவதும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.