Sunil Gavaskar: கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு கொல்கத்தா அணியில் கிடைக்காத அங்கீகாரம், பஞ்சாப் அணியில் கிடைப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
11 ஆண்டுகால ஏக்கம்:
ஐபிஎல் தொடரில் 2014ம் ஆண்டிற்கு பிறகு பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதே இல்லை என்ற, பஞ்சாப் அணியின் 11 ஆண்டுகால ஏக்கம் நடப்பு தொடருடன் முடிவுக்கு வந்துள்ளது. ஸ்ரேயாஸ் தலைமையிலான அந்த அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் விளையாடி எட்டில் வென்று, முதல் 4 இடங்களை உறுதி செய்துள்ளது. இதுபோக, மூன்று வெவ்வேறு அணிகளை பிளே-ஆஃப் சுற்றுக்கு வழிநடத்திய ஒரே கேப்டன் என்ற பெருமையையும் ஸ்ரேயாஸ் படைத்துள்ளார். டெல்லி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் என்ற ஒரே கேப்டன், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தாவை சம்பியனாக்கிய பெருமையும் அவரையே சேரும். இதனை குறிப்பிட்டு பலரும் ஸ்ரேயாஸ் அய்யரை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு கொல்கத்தா அணியில் கிடைக்காத அங்கீகாரம், பஞ்சாப் அணியில் கிடைப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கம்பீரை அட்டாக் செய்த சுனில் கவாஸ்கர்:
ஸ்ரேயாஸ் அய்யர் குறித்து கவாஸ்கர் பேசுகையில், “கடந்த ஆண்டு கேப்டனாக கோப்பையை வென்றபோதும், ஸ்ரேயாஸ் அய்யருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அனைத்து பாராட்டுகளும் வேறொரு நபருக்கு வழங்கப்பட்டன. மைதானத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு கேப்டன் தான் பொறுப்பாவார். வெளியே டக்-அவுட்டில் அமர்ந்து இருப்பவர் அதற்கு பொறுப்பேற்கமாட்டார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு கொல்கத்தா அணியில் கிடைக்காத அங்கீகாரம், பஞ்சாப் அணியில் கிடைக்கிறது. ரிக்கி பாண்டிங் தான் காரணம் என யாரும் கூறவில்லை” என சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், கம்பீரால் தான் கொல்கத்தா அணி கடந்த ஆண்டு கோப்பையை வென்றது என்ற கருத்தினை சுனில் கவாஸ்கர் மறுப்பது உறுதியாகியுள்ளது. அதேநேரம், கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் என்ற பாராட்டுகளால் தான், கம்பீர் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக உருவெடுத்துள்ளார்.
குஷியில் பஞ்சாப் அணி நிர்வாகம்:
கடந்த ஆண்டு கோப்பையை வென்று கொடுத்தும் கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யரை, பஞ்சாப் அணி ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. தற்போது வரை 12 இன்னிங்ஸ்களில் விளையாடி 4 அரைசதங்கள் உட்பட 435 ரன்களை குவித்துள்ளார். கேப்டனாகவும் திறம்பட செயல்பட்டு, இக்கட்டான சூழலில் முக்கிய முடிவுகளை எடுத்து, கடினமான போட்டிகளில் கூட தங்களுக்கு சாத்தியமான முடிவுகளை வசமாக்கினார். இதனால், கொடுத்த பணம் எள்ளளவும் வீண் போகவில்லை என பஞ்சாப் அணி நிர்வாகம் மிகவும் குஷியில் உள்ளது. முன்னதாக 2019ம் ஆண்டு பிளே-ஆஃப் சுற்றுக்கும், 2020ம் ஆண்டு இறுதிப்போட்டி வரையிலும் டெல்லி அணியை ஸ்ரேயாஸ் வழிநடத்தியபோது, ரிக்கி பாண்டிங் தான் பயிற்சியாளராக இருந்தார். தற்போதும் அதே கூட்டணி தான், பஞ்சாபின் வெற்றிப் பயணத்தை முன்னெடுத்துள்ளது.