IPL 2025 GT Vs DC: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் லக்னோ மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

குஜராத்தின் பிரமாண்ட வெற்றி:

ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் டெல்லி மற்ற்றும் குஜராத் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய டெல்லி அணி கே.எல். ராகுலின் சதத்தால் (112 ரன்கள்), 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்கள் சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர்கள் இருவருமே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களை பிரிக்க டெல்லி அணி எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய, பந்து மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரி எல்லைகளை கடந்தது. இதனால், 19 ஓவர்கள் முடிவிலேயே குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 205 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 61 பந்துகளில் 108 ரன்களும், கேப்டன் கில் 53 பந்துகளில் 93 ரன்களும் விளாசினார். ஐபிஎல் வரலாற்றிலேயே 200 ரன்கள் என்ற இலக்கினை விக்கெட் இழப்பின்றி எட்டிய முதல் அணி என்ற சாதனையை குஜராத் படைத்துள்ளது.

பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற 3 அணிகள்:

குஜராத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி புள்ளிப்பட்டியலில், முதலிடத்திற்கு முன்னேறியதோடு, நடப்பு தொடரில் முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. டெல்லி அணியின் இந்த தோல்வியால் தலா 17 புள்ளிகளை பெற்று இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளும் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன. இன்னும் ஒரே ஒரு இடம் மட்டுமே மீதமுள்ளது. மும்பை அணி 14 புள்ளிகளையும், டெல்லி 13 புள்ளிகளையும் கொண்டுள்ளன. வரும் 21ம் தேதி இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே போட்டி உள்ளதால், அதில் ஏதேனும் ஒரு அணி தான் வெற்றி பெற முடியும். அதன்படி, இரண்டில் ஏதேனும் ஒரு அணி தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.  அதேநேரம், லக்னோ மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால், 16 புள்ளிகளை எட்டி மற்ற போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும். அதேநேரம், லக்னோ அணியின் மோசமான ரன் ரேட் காரணமாக, மும்பை மற்றும் டெல்லி அணிக்கு இடையே தான் நான்காவது இடத்திற்கான கடுமையான போட்டி நிலவுகிறது.

ஐபிஎல் 2025 - புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டி வெற்றி தோல்வி புள்ளிகள் ரன்ரேட்
குஜராத் 12 9 3 18 0.795
பெங்களூரு 12 8 3 17 0.482
பஞ்சாப் 12 8 3 17 0.389
மும்பை 12 7 5 14 1.156
டெல்லி 12 6 5 13 0.260
கொல்கத்தா 13 5 6 12 0.193
லக்னோ 11 5 6 10 -0.469
ஐதராபாத் 11 3 7 7 -1.192
ராஜஸ்தான் 13 3 10 6 -0.701
சென்னை 12 3 9 6 -0.992

தப்புமா லக்னோ?

இன்று ஏக்னா மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் லக்னோ மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. ஐதராபாத் அணி ஏற்கனவே நடப்பு தொடரின் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. அதேநேரம், லக்னோ அணி பிளே-ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது அவசியம். வாழ்வா சாவா என்ற கட்டாயத்தில் களமிறங்கும் லக்னோ தப்புமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இதுவரையில் 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.