நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் புதிய அணியில் தான் இணைய இருப்பதாக, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை முன்பதிவு செய்யாத நிலையில் அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பரபரப்பான மற்றும் உணர்ச்சிமிக்க அணியில் இணைய இருப்பதாக ஸ்மித் அறிவித்துள்ளார்.


ஸ்மித் வெளியிட்ட வீடியோ:


ஸ்மித் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ”நமஸ்தே இந்தியா, உங்களுக்கு ஆச்சரியமளிக்கக்கூடிய செய்தி ஒன்று என்னிடம் உள்ளது. ஐபிஎல் 2023 தொடரில் நான் இணைகிறேன். ஆமாம், அது சரிதான். இந்தியாவில் பரபரப்பான மற்றும் உணர்ச்சிமிக்க அணியில் நான் இணைகிறேன்” என பேசியுள்ளார்.






வர்ணனையாளர் ஆகும் ஸ்மித்?


ஸ்மித் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் இணைய உள்ள அணி தொடர்பான எந்த விவரத்தையும் அவர் தெளிவுபடுத்தவில்லை. இதனால், காயம் காரணமாக பல அணிகளில் இருந்தும் பல முக்கிய வீரர்கள் தொடரில் இருந்து விலகி வருகின்றனர். அவர்களில் யாரேனும் ஒருவருக்கு மாற்று வீரராக ஸ்மித் களமிறங்கலாம் என கூறப்படுகிறது. அதேநேரம், ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமைகள் வெவ்வேறு நிறுவனங்கள் பெற்றுள்ளதால், நடப்பாண்டு பகுப்பாய்வு மற்றும் வர்ணனையாளர் பணியில் ஸ்மித் இடம்பெறலாம் என சில  தகவல்கள் தெரிவிக்கின்றன.


விலை போகாத ஸ்மித்:


கடந்த 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ஸ்மித் விலை போகாத நிலையில், நடப்பாண்டு தொடருக்கான மினி ஏலத்தில் தனது பெயரை அவர் முன்பதிவு செய்யவில்லை. இந்நிலையில் தான் அவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.


ஐபிஎல் தொடரில் ஸ்மித்:


ஐபிஎல் தொடரில் இதுவரை 6 அணிகளுக்காக ஸ்மித் விளையாடியுள்ளார். ஆனால், கடந்த 2021ம் ஆண்டு முதல் எந்தவொரு ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடவில்லை. இதுவரை 103 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித் ஒரு சதம் உட்பட, 2,485 ரன்களை குவித்துள்ளார். அதோடு, தோனி அடங்கிய  புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு 2017ம் ஆண்டு தலைமை தாங்கி, அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். ஆனால், அந்த இறுதிப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் புனே அணி தோல்வியை தழுவியது.


கேப்டன்சியில் அசத்தும் ஸ்மித்:


அண்மையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு ஒருநாள் தொடரில் கேப்டனாக ஸ்மித் செயல்பட்ட விதம் நல்ல பாராட்டை பெற்றது. அவரது தலைமையில் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதன் மூலம், ஒருநாள் தொடரில் சொந்த மண்ணில் கடந்த 4 ஆண்டுகளாக தோல்வியே சந்திக்காமல் இருந்த இந்திய அணியின் வெற்றி பயணமும் முடிவுக்கு வந்தது.