இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 16வது சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது.  இந்த தொடரின் முதல் போட்டியானது வருகிற மார்ச் 31ம் தேதி குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின் மூலம் தொடங்குகிறது. 


இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியின் ஸ்டாண்ட்-இன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஒரு வீரராக இல்லாமல், வர்ணனையாளராக ஐபிஎல் 2023 தொடரில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஸ்டீவ் ஸ்மித் 2021 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கு பிறகு எந்தவொரு ஐபிஎல் தொடரிலும் விளையாடவில்லை. 2021 ம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இருப்பினும், அந்த தொடரில் அவரது பங்களிப்பு சிறப்பாக இல்லை. அவரது அணியும் ஸ்டீப் ஸ்மித் அதிக போட்டிகளில் பெஞ்சிலேயே அமர வைத்தது. 


கடந்த 2021 ம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி ஸ்மித், 113 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் வெறும் 152 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி அவரை கழட்டி விட்டது. தொடர்ந்து அந்த ஆண்டு 2 கோடி அடிப்படை விலையில் ஏலத்தில் பதிவு செய்திருந்த போதிலும், எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. 


இதையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் ஸ்டீவ் ஸ்மித் தனது பெயரை பதிவு செய்யவில்லை. இருப்பினும், ஸ்டீவ் ஸ்மித், ஒரு வீரராக இல்லாவிட்டாலும், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளர்களுக்கு அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆனால், ஐபிஎல் தொடர் குறித்து தனது  ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ”வணக்கம் இந்தியா. உங்களுக்காக சில சந்தோஷமான செய்திகளுடன் இருக்கிறேன். நான் ஐபிஎல் 2023 தொடரில் இணைகிறேன்.” என தெரிவித்திருந்தார். 


ஸ்டீவ் ஸ்மித்தின் சமீபத்திய கேப்டன்ஷி:


இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா அணி கடந்த 2 மாதங்களாக 4 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா, ஸ்டாண்ட்-இன் கேப்டனான ஸ்மித் தலைமையில் வெற்றி பாதைக்கு திரும்பியது. குடும்ப காரணங்களால் பாட் கம்மின்ஸ் வீடு திரும்பிய பிறகு, ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து, ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்றது. 


முதல் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரையும் சமன் செய்தது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.