டி-20 போட்டியில் இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாத புதிய சாதனையை, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் படைத்துள்ளார். அதன்படி, இருபது ஓவர் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் எனும் பெருமையை சாஹல் தனதாக்கினார்.


டி-20 போட்டியில் 300 விக்கெட்டுகள்:


ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஹாரி ப்ரூக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம்,  இருபது ஓவர் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் எனும் பெருமையை சாஹல் தனதாக்கினார். அந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய சாஹல் வெறும் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


அதோடு ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில், மலிங்காவுடன் சேர்த்து இரண்டசாவது இடத்தை பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலில் சென்னை அணியின் முன்னாள் வீரர் பிராவோ 183 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதைதொடர்ந்து, மலிங்கா மற்றும் சாஹல் ஆகியோர் தலா 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.


டி-20 போட்டிகளில் சாஹல்:


32 வயதான சாஹல் 265 டி-20 போட்டிகளில் விளையாடி 303 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  இந்திய அணிக்காக 75 சர்வதேச டி-20 போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்களையும், ஐபிஎல் தொடரில் 132 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதைதவிர உள்ளூர் தொடர் உள்ளிட்ட 58 டி-20 போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டில் ராஜஸ்தான் அணிக்காக 17 போட்டிகளில் களமிறங்கி 27 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா நிற தொப்பியையும் தனதாக்கினார். இதனிடையே, சர்வதேச டி-20 போட்டிகளில்  இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற புவனேஷ்வர் குமாரின் சாதனையை, கடந்த ஜனவரி மாதம் சாஹல் முறியடித்தார். அந்த பட்டியலில் சாஹல் 91 விக்கெட்களுடன் முதலிடத்திலும், புவனேஷ்வர் குமார் 90 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.


டி-20 போட்டியில் இந்திய வீரர்கள்:


டி-20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில், 303 விக்கெட்களுடன் சாஹல் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து, 296 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அஷ்வின் 288 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.


யுஸ்வேந்திர சாஹல் -303


ஆர் அஸ்வின் - 288


பியூஷ் சாவ்லா - 276


அமித் மிஸ்ரா - 272


ஜஸ்பிரித் பும்ரா - 256


புவனேஷ்வர் குமார் - 256


ஹர்பஜன் சிங் - 235


உனத்கட் - 210


சர்வதேச அளவில் டி-20 விக்கெட் சாதனைகள்:


அதேநேரம், சர்வதேச அளவில் டி-20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இந்திய வீரர் ஒருவர் கூட இல்லை. அதிகபட்சமாக மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த பிராவோ 615 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 530 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.


டுவைன் பிராவோ - 615


ரஷித் கான் - 530


சுனில் நரைன் - 479


இம்ரான் தாஹிர் - 469


ஷாகிப் அல் ஹசன் - 451


வஹாப் ரியாஸ் - 413


லசித் மலிங்கா - 390


ரஸ்ஸல் - 390