ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் உம்ரான் மாலிக் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி, விக்கெட் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அசுர வேகத்தில் உம்ரான் மாலிக்:
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. அதேநேரம், உம்ரான் மாலிக்கின் அதிவேக பந்துவீச்சும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 14 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்து ராஜஸ்தான் அணி வலுவாக இருந்தது. அப்போது போட்டியின் 15வது ஓவரை உம்ரான் மாலிக் வீச, தேவ்தத் படிக்கல் எதிர்கொண்டார்.
ஓவரின் முதல் பந்தையே 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீச, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பந்து நேராக சென்று ஆஃப் ஸ்டம்பை அடித்து காற்றில் பறக்கவிட்டது. நொடிப்பொழுதில் விக்கெட்டை பறிகொடுத்த படிக்கல் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் நிற்க, நடப்பு தொடரில் எடுத்த முதல் விக்கெட்டை உம்ரான் மாலிக் உற்சாகமாக கொண்டாடி தீர்த்தார்.
வேகத்தில் மிரட்டும் உம்ரான் மாலிக்:
கடந்த 2020ம் ஆண்டு முதல் ஐதராபாத் அணியில் இருந்தாலும், 2021ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடராஜனுக்கு மாற்று வீரராக தான், முதன்முறையாக ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார். அறிமுகமானது முதலே தனது அதிவேக பந்துவீச்சால் மாலிக் கவனம் ஈர்த்து வருகிறார். 150 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பந்துவீசுவதை சர்வ சாதாரணமாக அவர் நிகழ்த்தி வருகிறார்.
கடந்த ஆண்டு மே 5ம் தேதி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினார். அவரது கேரியரிலேயே உம்ரன் மாலிக் வீசிய அதிவேக பந்தாக இது கருதப்படுகிறது. ஐபிஎல் தொடரில் இதுவரை 18 போட்டிகளில் விளையாடியுள்ள மாலிக், 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஐபிஎல் தொடரில் அவரது சிறப்பான பந்துவீச்சாகும்.
சர்வதேச தொடரில் மாலிக்:
ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து, கடந்தாண்டு ஜுன் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமானார். அதைதொடர்ந்து, ஆண்டு இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கி, சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் களமிறங்கினார். இதுவரை 8 ஒருநாள் மற்றும் 8 டி-20 போட்டிகளில் விளையாடி முறையே 13 மற்றும் 11 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ரன்களை அதிகம் வாரி வழங்கினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுப்பதால், இந்தியாவின் எதிர்கால நட்சத்திரமாக திகழ்வார் என நம்பப்படுகிறது.