இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 70 லீக் போட்டிகளைக் கொண்ட இந்த தொடடின்  ஐந்தாவது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.  ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், புவனேஷ்வர் குமார் தலைமையிலான ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. தான் கேப்டனாக அறிமுகமான போட்டியிலேயே டாஸ் வென்றதால் புவனேஷ்வர் குமார் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் அவரது மகிழ்ச்சிக்கு ராஜஸ்தான் அணி சரியான பதில் உடன் காத்து இருந்தது. 


சிறப்பான தொடக்கம்

ராஜஸ்தான் அணியின் இன்னிங்ஸை தொடங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் முதல் ஓவரில் மட்டும் நிதானம் காட்டினர். அதன் பின்னர் அதிரடியாக ஆடிய இருவரும் ஹைதரபாத் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடராஜன் ஓவரில் மட்டும் பட்லர் நான்கு பவுண்டரிகளை விளாசினார்.  

 

மிரட்டிய பட்லர்

20 பந்துகளில் அரைசதம் விளாசிய  பட்லரின் விக்கெட்டை வீழ்த்த பவர்ப்ளேவில் மட்டும் 5 பவுலர்கள் பயன்படுத்தப்பட்டனர். ஆனால் இதற்கு பலன் இறுதியில் தான் கிடைத்தது என்றாலும், அதற்குள் ராஜஸ்தான் அணியின் ரன்ரேட் உச்சத்தில் இருந்தது. அதிரடியாக ஆடிவந்த பட்லர் 22 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை ஃபரூக்கிடம் இழந்தார். பட்லர் மட்டும் 7 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசியிருந்தார். 

 

அதிரடி 100 ரன்கள்

அதன் பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாட 8 ஓவர்களில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 105 ரன்கள் குவித்து இருந்தது. நிலையான ஆட்டத்தினை ஆடி வந்த தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் தனது அரைசத்தினை கடந்து அசத்தினார். இவரது விக்கெட்டையும் ஃபரூக் வீழ்த்தினார். இதன் மூலம் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை ஃபரூக் வீழ்த்தியுள்ளார். 

 

அதன் பின்னர் களத்துக்கு வந்த படிக்கல் 2 ரன்கள் சேர்த்த நிலையில், உம்ரான் கானின் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். ஆனாலும், ராஜஸ்தான் அணியின் ரன் வேட்டை மட்டும் குறையவில்லை. அந்த அணி 14 ஓவர்களில் 150 ரன்களைக் கடந்து 200 ரன்களை நோக்கி நகர்ந்து கொண்டு வந்தது. 

 

200 ரன்கள்

17வது ஓவரின் முதல் பந்தில் நடராஜன் விக்கெட் வீழ்த்த, அதன் பின்னர் ஹெட்மயர் களத்துக்கு வந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 170ஆக இருந்தது. இதற்கிடையில் சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசி இருந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்த சீசனில் 200 ரன்களைக் கடந்த முதல் அணி என்ற பெருமையை ராஜஸ்தான அணி பெற்றுள்ளது.