அபுதாபியில் ராஜஸ்தான் அணியை டெல்லி வீழ்த்திய சற்று நேரத்தில், ஷார்ஜாவில் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் ஷார்ஜாவில் களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.


இதனால், பஞ்சாப் இன்னிங்சை கேப்டன் கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் தொடங்கினார். 3வது ஓவர் நிதானமாக இருவரும் ரன்களை சேர்த்தனர். ஆனால், 4வது ஓவரில் ஜேசன் ஹோல்டர் வீசிய முதல் பந்திலே கேப்டன் கே.எல்.ராகுல் மாற்று வீரராக பீல்டிங் செய்த சுஜித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 21 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்களை எடுத்தார். அவர் ஆட்டமிழந்ததும் ரசிகர்களால் செல்லமாக யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் களமிறங்கினார்.




அதேஓவரில் மற்றொரு வீரர் மயங்க் அகர்வாலையும் ஜேசன் ஹோல்டார் காலி செய்தார். அவரது பந்துவீச்சில் 5 ரன்களே எடுத்த நிலையில், மயங்க் அகர்வால் வெளியேறினார். அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் விழுந்ததால் கிறிஸ் கெயிலும், மார்க்ரமும் மிகவும் நிதானமாக ஆடினர். இந்த நிலையில், அணியின் ஸ்கோர் 57 ஆக இருந்தபோது நிதானமாக ஆடிய கிறிஸ் கெயில் 17 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரஷீத்கான் பந்துவீச்சில் எல்.பி.டபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.


இதையடுத்து, மார்க்ரமுடன் நிகோலஸ் பூரன் ஜோடிசேர்ந்தார். வந்த உடனே அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய நிகோலஸ் பூரண் பவுண்டரி அடித்த நிலையில், சந்தீப் சர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 4 பந்தில் 1 பவுண்டரியுடன் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த மார்க்ரமும் அணியின் ஸ்கோர் 88 ஆக இருந்தபோது ஆட்டமிழந்தார். அப்துல் சமத் பந்தில் மணீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். 15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 5 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களை எடுத்தது.




இந்த நிலையில், பஞ்சாப் அணியில் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தீபக் ஹூடா ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் மாற்று வீரர் சுஜித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுலும் ஹோல்டர் பந்துவீச்சில் இதே சுஜித்திடம்தான் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி கட்டத்தில் ஹர்பிரீத் பிராரும், பந்துவீச்சாளர் நாதன் எல்லீசும் ஓரிரு ரன்களாக திரட்டினர். நாதன் எல்லீஸ் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு125 ரன்களை எடுத்தது. ஹர்பிரீத் பிரார் 18 ரன்களை எடுத்தார்.




ஹைதராபாத் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சந்தீப் சர்மா, புவனேஷ்குமார், ரஷீத்கான், அப்துல் சமத் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.