ஐ.பி.எல். 2021ம் தொடருக்கான இன்றைய நாளில் முதல் ஆட்டத்தில் அபுதாபியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் ஷிகர்தவானையும், பிரித்விஷாவையும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து வீழ்த்தினர்.
21 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணியை கேப்டன் ரிஷப் பண்டும், ஸ்ரேயாஸ் அய்யரும் இணைந்து மீட்டனர். ரிஷப் பண்ட் நிதானமாக ஆட, ஸ்ரேயாஸ் அதிரடியாக ஆடினார். ரிஷப் பண்ட் 24 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களை எடுத்திருந்தபோது, அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஷிர் ரஹ்மான் பந்தில் ரிஷப்பண்ட் போல்டாகினார்.
இதையடுத்து, ஹெட்மயருடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் அதிரடியாக ஆடினார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் 43 ரன்களில் சஞ்சுசாம்சனால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். அவர் 32 பந்தில் 1 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஹெட்மயர் அடுத்தடுத்து பவுண்டரிகளை மைதானத்தில் பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய ஹெட்மயரும் 16 பந்தில் 5 பவுண்டரியுடன் 28 ரன்களை எடுத்தார். இறுதியில் லலித்குமார் 14 ரன்களையும், அக்ஷர் பட்டேல் 12 ரன்களையும் எடுக்க டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்களை குவித்தது.
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் முடிவில் அந்த அணியின் தொடக்க வீரர் லிவிங்ஸ்டன் அவேஸ்கான் பந்தில் 1 ரன்கள் எடுத்த நிலையில் ரிஷப்பண்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த ஓவரில் டெல்லி அணியின் பிரதான பந்து வீச்சாளரான நோர்ட்ஜே பந்தில் இளம்வீரர் ஜெய்ஸ்வால் 5 ரன்களில் விக்கெட் கீப்பர் ரிஷப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி நான்காவது ஓவரிலே அஸ்வினை எதிர்கொண்டது. அஸ்வின் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது பந்திலே அதிரடி வீரர் டேவிட் மில்லரை ரிஷப் பண்ட் ஸ்டம்பிங் செய்தார். இதனால், 17 ரன்களுக்குள் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து, நெருக்கடியில் தத்தளித்த அணியை கேப்டன் சஞ்சு சாம்சனும், மகிபால் லோம்ரோரும் இணைந்து மீட்டனர். ராஜஸ்தான் அணியினர் தங்களது முதல் பவுண்டரியையே ஆட்டத்தின் 8வது ஓவரில்தான் அடித்தனர். முதல் சிக்ஸரையும் அதே ஓவரில் மகிபால் பறக்கவிட்டார். வெற்றிக்கான பார்ட்னர்ஷிப்பை அமைக்கிறார்கள் என்று ராஜஸ்தான் ரசிகர்கள் ஆனந்தப்பட்ட தருணத்தில், ரபாடா பந்துவீச்சில் மகிபால் லோம்ரோர் 24 பந்தில் 19 ரன்களை எடுத்து வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய இளம் வீரர் ரியான்பராக் டெல்லி சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் படேலின் பந்துவீச்சில் போல்டாகினார். அவர் 7 பந்துகளில் வெறும் 2 ரன்களே எடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டும் சரியான பார்ட்னர் இல்லாமல் தனியாளாக போராடினார். ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 73 ரன்கள் தேவைப்பட்டது. இறுதிகட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடத்தொடங்கினார். அவர் 39 பந்தில் அரைசதத்தை கடந்தார். சஞ்சு சாம்சனுக்கு நன்றாக ஒத்துழைப்பு அளித்துக்கொண்டிருந்த ராகுல்திவேதியா 9 ரன்கள் எடுத்த நிலையில் நோர்ட்ஜே ஆட்டமிழந்தார்.
இறுதியில் 12 பந்துகளில் 54 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான நிலைக்கு ராஜஸ்தான் தள்ளப்பட்டது. களத்தில் சாம்சன் இருந்தாலும் 54 ரன்கள் என்பது மிகவும் கடினம் என்பதால் டெல்லி பந்துவீச்சாளர்கள் உற்சாகம் அடைந்தனர். இறுதியில் 6 பந்துகளுக்கு 45 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டதால், ராஜஸ்தானின் தோல்வி உறுதியானது. 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், டெல்லி அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனி ஆளாக போராடி 53 பந்தில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 70 ரன்களை குவித்தார். டெல்லி அணியில் நோர்ட்ஜே சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவேஸ்கான், அஸ்வின், ரபாடா, அக்ஷர் படேல் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் டெல்லி அணி 10 போட்டியில் ஆடி 8 வெற்றி 2 தோல்வியுடன் 16 புள்ளிகளுடன் முதலிடத்தை மீண்டும் அடைந்தது.