SRH Vs PBKS, IPL 2024: ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டி, இன்று மாலை 3.30 மணிக்கு ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.


ஐபிஎல் தொடர் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே 68 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில் லீக் போட்டிகள் நடைபெறும் கடைசி நாளான, இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, முதல் லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 


ஐதராபாத் - பஞ்சாப் மோதல்:


ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது பெறக்கூடும். அப்படி நடந்தால் பிளே-ஆஃப் இறுதிப்போட்டிக்குச் செல்ல இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், ஐதரபாத் அணி இன்றைய போட்டியில் வெல்ல தீவிரம் காட்டி வருகிறது. மறுமுனையில் ஐதராபாத் அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்ட நிலையில், ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்க பஞ்சாப் அணி தீவிரம் காட்டுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஓடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


பலம், பலவீனங்கள்:


உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது ஐதராபாத் அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், கிளாசென் என அதிரடி பேட்ஸ்மேன்கள் அட்டகாசமான ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சிலும் புவனேஷ்வர் குமார், நடராஜன், பாட் கம்மின்ஸ் ஆகியோர் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றனர். திறமையான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருந்தும், தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனதே பஞ்சாப் அண் நடப்பு தொடரில் பெரும்பாலான போட்டிகளில் தோல்வியடைய காரணமாக அமைந்தது. இந்நிலையில் சாம் கரன், பேர்ஸ்டோ உள்ளிட்ட வீரர்கள் தாயகம் திரும்பியதால், ஜிதேஷ் சர்மா இன்று பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார்.


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஐதராபாத் அணி 15 முறையும், பஞ்சாப் அணி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ஐதராபாத் அணி அதிகபட்சமாக 212 ரன்களையும், குறைந்தபட்சமாக 114 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், ஐதராபாத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 211 ரன்களையும், குறைந்தபட்சமாக 119 ரன்களையும் பதிவு செய்துள்ளது. 


சின்னசாமி மைதானம் எப்படி?


ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தின் மேற்பரப்பு பொதுவாக சமநிலையான போட்டியை வழங்குகிறது. போட்டியின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த முடிந்தாலும், பிற்பாதியில் பேட்ஸ்மேன்கள் எளிதில் ரன்களை சேர்க்க முடியும்.  டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம்.


உத்தேச அணி விவரங்கள்:


ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (WK), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, சன்வீர் சிங், பாட் கம்மின்ஸ் (சி), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே


பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், அதர்வா டைடே, ரிலீ ரோசோவ், ஷஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா, அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் ப்ரார், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், நாதன் எல்லிஸ், அர்ஷ்தீப் சிங்