நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் திரும்பிய ஒரு போட்டி என்றால் அது 68வது லீக் போட்டியான சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியாகத்தான் இருந்தது. இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. 


டாஸ் வென்ற சென்னை அணி பந்து விச முடிவு செய்தது. பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் சேர்த்தது. அடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி, அல்லது குறைந்த பட்சம் 201 ரன்கள் எடுத்தால் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பினைப் பெறும் என்ற நிலையில் களமிறங்கியது. 


ஆட்டத்தின் முதல் பந்தில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினர். இவரது விக்கெட்டினை மேக்ஸ்வெல் கைப்பற்றினார். இது சென்னை அணிக்கு அதிர்ச்சிகரமான தொடக்கமாக அமைந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து  மீள்வதற்கு முன்னதாகவே மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் அதிரடி ஆட்டக்காரர் டேரில் மிட்ஷெல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை யாஷ் தயாள் கைப்பற்றினார். 




அடுத்து இணைந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் ரஹானே கூட்டணி சிறப்பாகவும் பொறுப்பாகவும் விளையாடி அசத்தினர். இவர்கள் கூட்டணியை பெங்களூரு அணியால் எளிதில் பிரிக்க முடியவில்லை. கேப்டன் டூ ப்ளெசிஸ் எவ்வளவு முயற்சி செய்தும் இவர்களின் ஆட்டத்தினால் வெற்றி வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சம் சென்னை பக்கம் சென்றதாகவே ரசிகர்கள் உணர்ந்தனர். ஆனால் ஆட்டத்தின் 10வது ஓவரின் முதல் பந்தில் ரஹானே தனது விக்கெட்டினை இழந்தார். இந்த ஓவரை வீசிய ஃபர்குசன் இரண்டு ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்ததால் சென்னை அணிக்கு நெருக்கடி உருவானது. 


அடுத்து வந்த துபே ரவீந்திராவுடன் இணைந்து விளையாடினார். ரச்சின் 31 பந்தில் தனது அரைசதத்தினை கடந்திருந்தாலும் 37 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ரச்சின் தனது விக்கெட்டினை இழந்ததில் இருந்து சென்னை அணிக்கு தலைவலி ஆரம்பித்தது. 




மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே 15 பந்தில் 7 ரன்கள் மட்டும் சேர்த்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த சாண்ட்னரால் ஆட்டத்தில் சென்னை அணிக்கு சாதகமாக எந்த தாக்கத்தினையும் ஏற்படுத்த முடியவில்லை. இதனால் 16வது ஓவரிலேயே தோனி களத்திற்கு வந்தார். ஏற்கனவே களத்தில் இருந்த ஜடேஜா, தோனியுடன் இணைந்து சிறப்பாக விளையாடி பெங்களூரு அணிக்கு நெருக்கடி கொடுத்தார். 




கடைசி ஓவரில் சென்னை அணி 17 ரன்கள் எடுத்தால் ப்ளேஆஃப் வாய்ப்பினைப் பெறும் என்ற நிலை இருந்தது. யாஷ் தயாள் வீசிய முதல் பந்தினை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்டு இமாலய சிக்ஸர் விளாசினார் தோனி. அடுத்த பந்தையும் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து தனது விக்கெட்டினை இழந்தார். அடுத்து வந்த ஷர்துல் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க, கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்த ஜடேஜாவால் அந்த இரண்டு பந்துகளையும் தொடக்கூட முடியவில்லை. இதனால் இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் 191 சேர்த்தது. இதனால் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.